×

கேப்டன் கார்த்திக் அதிரடி அரை சதம் 2 ரன்னில் கிங்ஸ் லெவனை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்: ராகுல் மயாங்க் போராட்டம் வீண்

அபுதாபி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 ரன் வித்தியாசத்தில் போராடி  தோற்றது.ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட் செய்ய  முடிவு செய்தார். அந்த அணியில் ஷிவம் மாவிக்கு ஓய்வளிக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார்.பஞ்சாப் அணியில் காயம் அடைந்த ஷெல்டன் காட்ரெலுக்கு பதிலாக கிறிஸ் ஜார்டன் இடம் பெற்றார். அதிரடி வீரர் கிறிஸ் கேல் இந்த போட்டியிலும்  களமிறக்கப்படவில்லை. திரிபாதி, கில் இருவரும் கொல்கத்தா இன்னிங்சை தொடங்கினர். திரிபாதி 4 ரன் மட்டுமே எடுத்து ஷமி வேகத்தில்  ஸ்டம்புகள் சிதற கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ராணா 2 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, கேகேஆர் அணிக்கு  அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அந்த அணி 3.3 ஓவரில் 14 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஷுப்மான் கில் - இயான்  மோர்கன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 49 ரன் சேர்த்தது. மோர்கன் 24 ரன் எடுத்து (23 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்)  பிஷ்னோய் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் வசம் பிடிபட்டார்.
 
கார்த்திக் அதிரடி: இதைத் தொடர்ந்து கில்லுடன் இணைந்த கேப்டன் கார்த்திக், பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள கொல்கத்தா ஸ்கோர் திடீர்  வேகம் எடுத்தது. பஞ்சாப் பந்துவீச்சை பதம் பார்த்த இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தனர். சற்று நிதானமாக விளையாடிய கில்  57 ரன் (47 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ரன் அவுட்டானார். அதிரடியை தொடர்ந்த கார்த்திக் 22 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். ரஸ்ஸல் 5 ரன்  எடுத்து வெளியேற, கார்த்திக் 58 ரன் (29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் ரன் அவுட்டானார். கொல்கத்தா அணி 20 ஓவர்  முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. கம்மின்ஸ் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் ஷமி, அர்ஷ்தீப், பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 3 கொல்கத்தா வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தது  குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 20 ஓவரில் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் களமிறங்கியது. வலுவான தொடக்கம்:  கேப்டன் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் இருவரும் துரத்தலை தொடங்கினர். புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தின் பின்தங்கி இருப்பதால், ராகுல்  கடுமையான நெருக்கடியுடன் இந்த சவால எதிர்கொண்டார்.

பொறுப்புடன் விளையாடிய ராகுல் - மயாங்க் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.1 ஓவரில் 115 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ராகுல் 42  பந்திலும், மயாங்க் 33 பந்திலும் அரை சதத்தை நிறைவு செய்து நம்பிக்கை அளித்தனர். மயாங்க் 56 ரன் (39 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து  பிரசித் பந்துவீச்சில் கில் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பூரன் 16 ரன், பிரப்சிம்ரன் 4 ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர். வழக்கத்தை  விடவும் மிக நிதானமாக விளையாடிய ராகுல் 74 ரன் (58 பந்து, 6 பவுண்டரி) எடுத்து பிரசித் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, பஞ்சாப் அணிக்கு  நெருக்கடி முற்றியது.துரத்தும் துரதிர்ஷ்டம்: கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்ட நிலையில், நரைன் பந்துவீச்சை மேக்ஸ்வெல் எதிர்கொண்டார். முதல்  பந்தில் 2 ரன் எடுத்த அவர், 2வது பந்தை வீணடித்தார். 3வது பந்தை மேக்ஸ்வெல் பவுண்டரிக்கு விரட்ட, அடுத்த பந்தில் 1 லெக் பை கிடைத்தது.  5வது பந்தில் மன்தீப் சிங் விக்கெட்டை இழந்ததால், கடைசி பந்தில் மேக்ஸ்வெல் சிக்சர் அடித்தால் தான் பஞ்சாப் அணிக்கு சூப்பர் ஓவர் வாய்ப்பாவது  கிடைக்கும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

நரைன் ஆப் திசையில் மிக வைடாக வீசிய பந்தை மேக்ஸ்வெல் கவர் திசையில் தூக்கி அடிக்க, உயரே பறந்த பந்து துரதிர்ஷ்ட வசமாக எல்லைக்  கோட்டுக்கு ஒரு இஞ்ச் உள்ளே விழுந்ததால் பவுண்டரி மட்டுமே கிடைத்தது. இதனால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்த பஞ்சாப்  அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டு 6வது தோல்வியை அரவணைத்துக் கொண்டது. மேக்ஸ்வெல் 10 ரன், ஜார்டன் (0)  ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதிரடியாக அரை சதம் விளாசிய கொல்கத்தா கேப்டன் கார்த்திக் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.



Tags : Karthik ,fight ,Kings XI ,Knight Riders ,Rahul Mayang , Captain Karthik Action Half Cent Kings XI on 2 runs Dropped Knight Riders: Rahul Mayank The struggle is in vain
× RELATED போக்சோ சட்டத்தில் வாலிபர் அதிரடி கைது