×

நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு 4வது திருமணம் செய்த போலீஸ்காரர் மகன் கைது: திருச்சி, சென்னை, தேனி பெண்களை வலையில் வீழ்த்தியது அம்பலம்

லால்குடி:  மூன்று  பெண்களுடன் நடந்த திருமணங்களை மறைத்து 4வதாக தேனி பெண்ணை  மணந்த திருச்சி போலீஸ்காரரின் மகன்  கைது செய்யப்பட்டார். திருச்சி  ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருப்பவர் மகாலிங்கம். இவரது மகன் கார்த்திக்  (26). இவருக்கும் தேனி மாவட்டம் குட்டிஆசாரிப்பட்டி  பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் சுமதிக்கும் (21)  கடந்த 2019 பிப்ரவரியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் திருமணம்  நடந்தது. திருவெறும்பூர் பாலாஜி நகரில் இருவரும்  வசித்து வந்தனர். கார்த்திக் அந்த பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள்  விற்பனை செய்யும்  கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின்போது, சுமதிக்கு 16 பவுன் நகை போட்டுள்ளனர். நகைகள் அனைத்தையும், விற்று   செலவு செய்து விட்ட கார்த்திக், மேலும் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி  சுமதியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே சுமதி 3  முறை கர்ப்பம் தரித்தார். 3 முறையும் கார்த்திக் சொன்னதால், கருக்கலைப்பு  செய்து விட்டார்.

நாளடைவில், கணவனின்  நடத்தையில் சந்தேகமடைந்த சுமதி, அவரது செல்போனில் ஆய்வு செய்தார். அதில், சில பெண்களுடன் கார்த்திக் இருப்பதை  கண்டுபிடித்தார்.  கார்த்திக்கிடம் கேட்டபோது, மேலும் 3  பெண்களுடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. 6 வருடத்துக்கு முன் திருச்சியை  சேர்ந்த ஸ்டெல்லாவை  மணந்து 4 வயதில் மகன் இருக்கிறான். அதன்பின், சென்னையை சேர்ந்த வாணி, நீலா ஆகியோரை மணந்துள்ளார். வாணிக்கு ஒன்றரை வயதில்  பெண் குழந்தை  உள்ளது. ஸ்டெல்லாவுடன் நடந்த திருமணம் மட்டுமே  கார்த்திக்கின் பெற்றோர் ஏற்பாட்டில் நடந்துள்ளது. மற்ற 2 திருமணங்களும்   கார்த்திக்கே சிலரின் உதவியோடு செய்துள்ளார். இந்த விஷயங்கள் தெரிந்ததும் சுமதியும், அவரது பெற்றோரும் அதிர்ச்சி  அடைந்தனர்.

இதுபற்றி போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தனர். பின்னர் அங்கிருந்து திருச்சி திருவெறும்பூர் அனைத்து  மகளிர் காவல்  நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த போலீசார்,   கார்த்திக்கை நேற்று முன்தினம் கைது செய்து, திருச்சி மத்திய  சிறையில்  அடைத்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘கார்த்திக் பணம், நகைக்கு ஆசைப்பட்டு 4 பேரை திருமணம் செய்துள்ளார்.  ஏற்கனவே திருமணமான 3 பெண்களும்  கார்த்திக்குடன் தொடர்பில் இல்லை.  அவர்கள் கார்த்திக் மீது புகாரும் தரவில்லை. இப்போது சுமதி மட்டும் புகார்  கொடுத்துள்ளார். அதன்பேரில்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.    

நண்பனுக்கு பார்த்த பெண்
4வது மனைவி சுமதியை கார்த்திக்கின் நண்பருக்குதான் முதலில் பெண்  பார்த்துள்ளனர். அப்போது நண்பருடன் சென்ற கார்த்திக், சுமதியுடன் பழகி  அவரை  தன் வலையில் வீழ்த்தி உள்ளார். பின்னர் சுமதியின் பெற்றோர் உதவியுடனே அவரை  திருமணம் செய்தார். திருமணத்தின்போது, உங்கள்  பெற்றோர் ஏன் வரவில்லை  என்று சுமதி வீட்டார் கார்த்திக்கிடம் கேட்டபோது, இந்த திருமணத்தில்  விருப்பம் இல்லாததால் அவர்கள் வரவில்லை  என்று கூறி சமாளித்ததாக போலீசார்  தெரிவித்தனர்.


Tags : policeman ,jewelery ,Chennai ,Trichy , Jewelry, lust for money 4th married Policeman's son arrested: Trichy, Chennai, Theni women exposed in the net
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...