×

திருவண்ணாமலையில் 2,668 அடி தீபமலையில் ஏறிய வங்கி காசாளர் மூச்சுத்திணறி பலி

* சிக்கித்தவித்த 9 மாணவர்கள் மீட்பு
* 2 பயிற்சியாளர்கள் அதிரடி கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தடையைமீறி மலையேற்ற பயிற்சியின்போது தீபமலை உச்சியில் ஏறிய வங்கி காசாளர் மூச்சுத்திணறி  பலியானார். அங்கு சிக்கித்தவித்த மாணவர்கள் 9 பேர் மீட்கப்பட்டனர். பயிற்சியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகில் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் நடத்தி வருபவர் விஜய்ஆனந்த் (48). பயிற்சியாளர் பச்சையப்பன் (34).  இவர்கள் மாணவர்களை, அடிக்கடி மலை ஏற்ற பயிற்சிக்கு அழைத்து செல்வார்கள். அதன்படி, மாணவர்கள் 9 பேரை, திருவண்ணாமலை தீபமலைக்கு  நேற்று அதிகாலை அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், மாணவர்களின் தந்தையான ஆசிரியர் மணி(45), தனியார் வங்கி காசாளர் ஆனந்தராஜ்(42)  ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். 2,668 அடி உயர மலையின் உச்சிக்கு செல்லச் செல்ல மாணவர்கள் சோர்வடைந்துள்ளனர்.

மேலும்,  மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளனர். மகனுடன் சென்ற வங்கி காசாளர் ஆனந்தராஜ் கடுமையான  மூச்சுத்திணறலால் துடித்துள்ளார். மலை உச்சியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால், மருத்துவ உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்ைல.  இதனால் ஆனந்த்ராஜ், சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். அதன்பின் சிக்னல் கிடைக்கும் குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற பயிற்சியாளர்கள்,  போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். மலையேறும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் உடன்  வந்தனர்.

அவர்கள் மலை உச்சியில் சிக்கித்தவித்த 9 மாணவர்களையும் மீட்டு பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனர். ஆனந்தராஜின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மலைமீது ஏற பாதை வசதியில்லை. அனுபவம் இல்லாதவர்கள் மலையேறுவது ஆபத்தானது. எனவே, மலைமீது ஏறுவதற்கு வனத்துறை நிரந்தரமாக  தடை விதித்துள்ளது. தடையை மீறி, அனுமதியின்றி மாணவர்களை மலைக்கு அழைத்துச்சென்றது தொடர்பாக, திருவண்ணாமலை கிழக்கு போலீசார்  வழக்குப்பதிந்து, பயிற்சியாளர்கள் விஜய்ஆனந்த், பச்சையப்பன் ஆகியோரை கைது செய்தனர்.



Tags : death ,Thiruvannamalai , In Thiruvannamalai Climb the 2,668-foot volcano Bank cashier suffocates to death
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...