×

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு ஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுநிலை படிப்பு, டிப்ளமோ படிப்புகளில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட  வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் சிறப்பு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி)  50 சதவீத இடங்களை அரசுப்பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும். ஒதுக்கீட்டுக்கு பின்னர்தான் இந்த படிப்புகளுக்கான  முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, அரசுப்பணியில்  உள்ள மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்  உள்ளது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் இந்த படிப்புகளுக்கு அரசுப்பணியில் உள்ள  மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றார்.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, இதுதொடர்பாக நடைபெற இருந்த ஆன்லைன் கலந்தாய்வு மறு உத்தரவு  பிறப்பிக்கும்வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கின் நிலை குறித்து அரசிடம் கேட்டு தெரிவிக்கப்படும் என்றார்.இதையடுத்து,  வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அப்போது, அரசு பதில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.



Tags : doctors ,Tamil Nadu High Court , In super specialty medical courses In government service Case seeking quota for doctors: Government of Tamil Nadu Order of the High Court
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை