×

கூட்டணி கட்சிகளின் நான்கு இடங்கள் காலியானதால் மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: அதிமுகவில் கடும் போட்டி

புதுடெல்லி: சிவசேனா, சிரோன்மணி அகாலிதளம் கட்சிகள் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், அரசுக்கு ஆதரவு அளித்து வரும்  அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணி அமைச்சரவையில் சேர்க்க மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்  அமைச்சரவையில் இடம் கிடைக்க அதிமுகவில் போட்டா போட்டி உருவாகியுள்ளது.கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற பிரதமர் மோடி, 2019 மே 30 அன்று புதிய அமைச்சரவையுடன் தனது இரண்டாவது  ஆட்சிப் பதவியைத் தொடங்கினார். 24 கேபினட் அமைச்சர்கள், ஒன்பது இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு), 24 இணை அமைச்சர்கள் உட்பட 57  அமைச்சர்களுடன் மோடி பதவியேற்றார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான சிவசேனா (அரவிந்த் சாவந்த்),  சிரோன்மணி அகாலிதளம் (ஹர்சிம்ரத் கவுர் பாதல்), லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ்வான்), இந்திய குடியரசு கட்சி (ராம்தாஸ் அதவாலே) ஆகிய  கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சி அமைச்சரவையில் சேரவில்லை. இந்நிலையில், கடந்த ஒன்றரை  ஆண்டுக்கு மேலாகியும் மத்திய அமைச்சரவை விரிவாக்கமோ அல்லது மறுசீரமைப்போ செய்யப்படவில்லை. ஆனால், மத்திய பாஜக அரசில் அங்கம்  வகித்து வந்த சிவசேனா, கடந்த ஆண்டு இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது. இதற்கு காரணம் மகாராஷ்டிரா மாநில  பேரவை தேர்தல் முடிவுகள். அடுத்ததாக, வேளாண் சட்டங்களை முன்னிறுத்தி சிரோன்மணி அகாலிதளமும் சமீபத்தில் கூட்டணியில் இருந்து  வெளியேறியது. இதனால், மேற்கண்ட இரு கட்சிகளின் அமைச்சர்களும் பதவி விலகினர்.முன்னதாக, ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன் இறந்தார். அதனால்,  அமைச்சரவையில் மேலும் ஒரு பதவி காலியானது. அதன் தொடர்ச்சியாக, லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு துறை  அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் இரு தினங்களுக்கு முன் மரணமடைந்தார். இதன் மூலம் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதித்துவ காலியிடம்  அதிகரித்து உள்ளது. குறிப்பாக, இன்றைய நிலையில் இரண்டு அமைச்சர்கள் மறைவும், இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா  செய்ததால் நான்கு அமைச்சர்களின்பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவர்களில் மூன்று பேர் கேபினட் அமைச்சர்கள் ஆவர். இதனால், ஒரு மூத்த மத்திய அமைச்சர் நான்கு அமைச்சகங்களையும், ஐந்து அமைச்சர்கள்  தலா மூன்று அமைச்சகங்களையும் கவனித்து வருகின்றனர். இது தற்போதைய அமைச்சர்கள் மீது பணி அழுத்தத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக  மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண்மை, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட 4 அமைச்சகங்களை கவனிக்கிறார். தலா மூன்று  அமைச்சகங்களை கவனிக்கும் அமைச்சர்கள் பட்டியலில் ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ்வர்தன், பியூஷ் கோயல், பிரஹ்லாத் ஜோஷி மற்றும் பிரகாஷ்  ஜவடேகர் ஆகியோர் உள்ளனர்.இதேபோல், கேபினட் அந்தஸ்தில் உள்ள 2, 3 அமைச்சகங்களை கூட சில அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர். இதனால், மத்திய அரசுப்பணிகளில்  சில கொள்கை முடிவுகள் எடுப்பதில் தாமதங்கள் ஏற்படுவதாகவும், கூடுதல் இலாக்களை கவனிக்கும் அமைச்சர்கள் பணி சுமையால்  சலிப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் மற்றும் மாற்றங்கள் செய்ய பிரதமர் மோடிக்கு அழுத்தம்  கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவும் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுிகறது. ஏற்கனவே அமைச்சரவையில் அதிமுக இடம்பெறும் என்று  கூறப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு இடம் வேண்டும் என்றார். எடப்பாடி பழனிச்சாமியோ வைத்திலிங்கத்தக்கு ஆதரவு தெரிவித்தார்.  இதனால் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. தற்போது, ரவீந்திரநாத்துடன் சேர்த்து வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தம்பித்துரை  ஆகியோரும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ரவீந்திரநாத்துக்கு பதவி கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் முயன்றால், மற்ற 3 பேரில் ஒருவருக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அளிப்பார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுகவில் அமைச்சரவையில் இடம் பிடிப்பது குறித்து இப்போதே போட்டி ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போட்டா  போட்டி காரணமாக அதிமுவினருக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘வழக்கமாக அமைச்சரவை விரிவாக்கம் என்பது ஓராண்டுக்கு ஒரு முறை சில  மாற்றங்கள் செய்யப்படும். ஆனால் இந்த முறை அது ஒரு வருடத்திற்கு மேலாகியும் பல இலாக்காக்களை மற்ற சீனியர் அமைச்சர்கள் கவனித்து  வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசுப் பணியில் பல விஷயங்கள் மாறிவிட்டன. பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர்  மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்து மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. பாஜக கூட்டணியில் சில ஆதரவு கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதால்,  அந்த கட்சிகளின் எம்பிக்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தன.

* 2வது முறை மோடி பிரதமராக பதவி ஏற்று, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும் மத்திய அமைச்சரவை விரிவாக்கமோ, மறுசீரமைப்போ  செய்யப்படவில்லை.
* அமைச்சர்கள் விலகல், மறைவு காரணமாக கூட்டணிகளின் பிரதிநிதித்துவ காலியிடம் அதிகரித்து உள்ளது.



Tags : Union Cabinet ,coalition parties ,AIADMK , Because four seats in the coalition parties are vacant Union Cabinet to be reshuffled soon
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...