×

ஆண்டிபட்டி அருகே அய்யனார்புரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர மக்கள் கோரிக்கை: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள அய்யனார்புரம் கிராமத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே அடிப்படை வசதிகளை செய்துதர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சம்பட்டி ஊராட்சியில் அய்யனார்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பது பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அய்யனார்புரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.முக்கியமாக, கிராமத்திற்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி போன்ற வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். அய்யனார்புரம் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கிராம மக்கள் அவசர நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,‘‘தங்களது கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் ஆட்டோ கூட வருவதில்லை. இதனால் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். கோடை காலங்களில் கிணற்று தண்ணீர் வற்றி போவதால் குடிநீர் இல்லாமல், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாததால் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. எனவே தங்களது கிராமத்திற்க்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர்.


Tags : village ,Andipatti ,district administration , Andipatti, Ayyanarpuram, basic amenities, people demand
× RELATED கடமலைக்குண்டு மலையடிவார கிராமங்களில்...