×

சிவகாசி அருகே குடோனில் பதுக்கிய ரூ.1 கோடி பட்டாசுகள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

சிவகாசி: சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் உள்ள ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடைகளில் பட்டாசுகளை இருப்பு வைக்கும்போது, அரசு விதித்துள்ள விதிகளை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தம் கடை உரிமையாளர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் கடைகள் அருகே உள்ள கட்டிடங்களில் சிலர் பட்டாசுகளை பதுக்கி வைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

சிவகாசி - சாத்தூர் சாலையில் பாறைப்பட்டி அருகே விஷ்ணு டிரான்ஸ்போர்ட் குடோனில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி தாசில்தார் லோகநாதன் தலைமையில் குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 1,800 பட்டாசு பண்டல் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கட்டிட உரிமையாளர் தர்மராஜ் மற்றும் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gudon ,Sivakasi , Rs 1 crore firecrackers seized in Sivakasi
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...