×

புதர்கள் மண்டியதுடன் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வரும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம்: விரைந்து சீரமைத்து நூலகம் அமைக்க மக்கள் கோரிக்கை

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் உள்ள கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தை சுற்றி புதர்கள் மண்டியதுடன் விஷஜந்துக்களின் கூடாரமாக மாறிய வருகிறது. இதை சீரமைத்து நூலகம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் பிறந்து 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருக்கு கடந்த திமுக ஆட்சியில் பட்டுக்கோட்டையில் முத்துப்பேட்டை சாலையில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அந்த மணிமண்டபத்தை 1999ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் படைப்புகள் 1993ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது.

இப்படிப்பட்ட உலகம் போற்றும் மக்கள் கவிஞரின் மணிமண்டபத்தின் பெயர் பலகை துருப்பிடித்து எழுத்துக்கள் தெரியாத அளவுக்கு உள்ளது. மணிமண்டபத்தை சுற்றி புதர்கள் மண்டி விஷஜந்துக்களின் கூடாரமாக மாறிவிட்டது. மணிமண்டபத்தின் வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கழிவறைகளில் துர்நாற்றம் வீசுகிறது. மணிமண்டபத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பாத்ரூம்களில் பல விளக்குகள் இல்லாமலும், பல விளக்குகள் எரியாமலும் உள்ளது. குழந்தைகள் விளையாடும் விளையாட்டு சாதனங்கள் உடைந்து அந்தரத்தில் தொங்குகின்றன.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உலகம் போற்றும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மணிமண்டப வளாகம் முழுவதும் புதர்கள் மண்டி விஷஜந்துக்களின் கூடாரமாக மாறிவிட்டது.

மேலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உள்ள கழிவறைகளில் துர்நாற்றம் வீசுகிறது. மொத்தத்தில் மணிமண்டபம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதை தமிழக அரசு கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. மணிமண்டபம் கட்டப்பட்ட காலத்திலிருந்தே அரசு தேர்வுகளுக்கும், போட்டி தேர்வுகளுக்கும் படிக்கக்கூடிய மாணவர்கள் ஏராளமானோர் இங்கு வந்து அமர்ந்து படித்து வருகின்றனர். தற்போது மணிமண்டபத்துக்கு நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு படிப்பதற்கு ஏதுவாக எந்த ஒரு புத்தகங்களும் இல்லை. செய்தித்தாள்களும் இல்லை. எனவே தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மணிமண்டபத்தை பராமரித்து புதுப்பொலிவுடன் மாற்றி மணிமண்டப வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்க வேண்டும் என்றனர்.

Tags : Shrubs, kneeling and poisonous, as a tent for animals, Pattukottai Kalyanasundaram Manimandapam
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி