×

வெண்டைக்காய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் தற்போது வெண்டைக்காய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.    பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் நெகமம், கோமங்கலம், வடக்கிபாளையம், டி.நல்லிகவுண்டன்பாளையம், சூலக்கல், ஜமீன்முத்தூர், பொன்னாபுரம், கோட்டூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெண்டைக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மழை காலம் மட்டுமின்றி வெயில் தாக்கத்தின்போதும் வெண்டை சாகுபடியில், விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு  போதிய மழையில்லாததால், அப்போது வெண்டைக்காய் சாகுபடி மிகவும் குறைந்தது. அதன்பின், கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக கிராமங்களில் வெண்டை சாகுபடி அதிகமானது. அதுபோல் இந்த ஆண்டும் கோடை மழையை எதிர்நோக்கி பல கிராமங்களில் வெண்டை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

இதில் நல்ல விளைச்சலடைந்த வெண்டைகள், கடந்த 2 மாதத்திற்கு முன்பு அறுவடை செய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டன. இந்நிலையில், வெண்டைக்காய் வரத்து அதிகரிப்பால், ஒரு கிலோ வெண்டை ரூ.20 முதல் ரூ.25 வரை குறைந்த விலைக்கு விற்பனையானது. இதற்கிடையே, அண்மையில் பெய்த தென்மேற்கு பருவமழையால், ஒரு மாதத்திற்கு முன்பு பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் வெண்டை சாகுபடியில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில வாரங்களில் வெண்டை அறுவடை செய்யப்படும். இதனால், தற்போது மார்க்கெட்டுக்கு வெண்டைக்காய் வரத்து குறைந்து ஒரு கிலோ ரூ.45 வரை விற்பனையாகிறது.

Tags : Mung bean, cultivation, farmers, intensity
× RELATED ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி...