×

அறந்தாங்கியில் அதிகாலையில் பயங்கர தீவிபத்து: 3 கடைகள் எரிந்தது சேதம்

அறந்தாங்கி: அறந்தாங்கியில் நேற்று அதிகாலை நடந்த தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து சேதமானது. அறந்தாங்கி வடகரை முருகன் கோவில் அருகே பாலாஜி என்பவருக்கு சொந்தமான அருண் ஓட்டல், சோமு என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடை, சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான காபி ஷாப் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கடைக்காரர்கள் தங்கள் கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். அருண் ஓட்டல் உரிமையாளர் பாலாஜி இறுதியாக தனது கடையை அடைத்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் அருண் ஓட்டலில் பற்றிய தீ மளமளவென்று 3 கடைகளுக்கும் பரவியது. அதிகாலை 2.30 மணிக்கு இந்த கடைகளுக்கு எதிரில் உள்ள வீட்டில் குடியிருந்து வரும் அறந்தாங்கி முன்னாள் வர்த்தக சங்கத்தலைவர் ரவீந்திரக்குமார் என்பவர் தூக்கத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக எழுந்துள்ளார்.

அப்போது ஜன்னல் வழியாக எதிரே பார்த்தபோது, கடைகள் தீப்பற்றி எரிவதை பார்த்துள்ளார். உடனே அவர் இதுகுறித்து அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தீயை அணைத்துக் கொண்டிருந்தபோது, காபி ஷாப்பில் இருந்த ஒரு சிலிண்டர் திடீரென்று வெடித்து, கடையின் கூரையை பிய்த்துக் கொண்டு வெளியே விழுந்தது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மொத்தம் ரூ.14 லட்சம் மதிப்பிலான அனைத்து பொருள்களும் எரிந்து சேதமானது. இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : shops ,Aranthangi , Aranthangi, early in the morning, terrible, fire
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி