×

மாவட்ட கல்வி அலுவலருக்கு ரூ.5,000 அபராதம்!: நீதிமன்ற உத்தரவை பள்ளி கல்வித்துறை நிறைவேற்றுவதில்லை..ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை..!!

மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை பள்ளி கல்வித்துறையில் பெரும்பாலும் நிறைவேற்றுவதில்லை என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மாவட்ட கல்வி அதிகாரி தரப்பில் ஐ கோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்ய முடிவானது. தனி நீதிபதி உத்தரவை எதிர்க்கும் மனுவை 543 நாட்கள் தாமதமாக மனு செய்வதால், தங்கள் தரப்பு தாமதத்தை ஏற்று அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டுமென மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘2018ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை இதுவரை அமல்படுத்தவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. ஐகோர்ட்டின் பல உத்தரவுகளை பள்ளி கல்வித்துறையில் பெரும்பாலும் நிறைவேற்றுவதில்லை. பள்ளி கல்வித்துறை தொடர்பான வழக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேலாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கலாகிறது.

இது துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. இந்த வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில் உபரி ஆசிரியர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.444 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறார்களா என்பது சந்தேகமே. நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில், மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கையுடன், அபராதமும் விதிக்க வேண்டும். எனவே, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகளுக்கு முறையான சட்ட ஆலோசனை கிடைக்காததால்தான் இதுபோன்று நடக்கிறது. எனவே, சட்ட ஆலோசனைகள் வழங்குபவரை ஏன் நியமனம் செய்யக்கூடாது’’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பள்ளிக்கல்வித் துறை செயலர் மற்றும் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.


Tags : District Education Officer ,branch judges ,School Education Department , District Education Officer, Rs 5,000 fine iCourt Branch, Judges, Torture
× RELATED மினி லாரி – கார் மோதல் கல்வி அலுவலர், டிரைவர் சாவு