×

மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல் தகனம் : இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

பாட்னா,:லோக்ஜனசக்தி தலைவரும், மறைந்த மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. பாட்னாவில் நடந்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.மறைந்த மத்திய  அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) நிறுவனருமான ராம் விலாஸ்  பஸ்வான் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். டெல்லியில் உள்ள அவரது 12 ஜனபாத் இல்லத்தில் அவரது உடலுக்கு  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்று பிற்பகல் சிறப்பு விமானத்தில் அவரது உடல் பீகார் மாநிலம் பாட்னா  வந்தடைந்தது.

ராம் விலாஸ் பஸ்வானின் உடல் பாட்னா விமான நிலையம் வந்தடைந்த போது, ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி ெசலுத்த காத்திருந்தனர். சாம்சூன் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், ​சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே, ரவிசங்கர் பிரசாத், சட்டமன்ற சபாநாயகர் விஜய் குமார் சவுத்ரி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அவர்கள், பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானுக்கு ஆறுதல் கூறினர்.
​பின்னர் பஸ்வானின் உடல் மரியாதையுடன் ஒரு சிறப்பு வாகனத்தில் வைக்கப்பட்டு, சட்டசபை வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது வாகனத்தின் பின்னால் ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாக நடந்து சென்று அஞ்சலி செலுத்தினர். பீகாரின் பல பகுதிகளிலிருந்து மக்கள் பஸ்வானின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தனர். சட்டசபை வளாகத்தில் அஞ்சலி முடிந்த பிறகு, பஸ்வானின் உடல் லோக்சக்தி கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்றிரவு முழுவதும் நடந்த பிரார்த்தனைகள், பஜனைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இறுதிச் சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இறுதி ஊர்வலம் அவரது கிருஷ்ணா பூரி இல்லத்திலிருந்து காலை  11.30 மணிக்கு ெதாடங்கி ஜனார்டன் இடுகாட்டிற்கு சென்றது. அதன்பின், திகாவில் உள்ள ஜனார்த்தன் இடுகாட்டில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது மகன் சிராக் பஸ்வான், தந்தை ராம்விலாஸ் பஸ்வானின் உடலுக்கு தீமூட்டினார். பஸ்வானின் மறைவு, பீகார் மக்களுக்கு மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பெரும் இழப்பாக உள்ளது.


Tags : Union Minister ,Ramvilas Baswan ,funeral ,
× RELATED தமிழர்களுக்கு எதிராக கருத்து...