×

கமுதி அருகே சிறிய தடுப்பு சுவரால் தடுமாறும் வாகனங்கள்

கமுதி : கமுதி அருகே சிறிய தடுப்புச்சுவருடன் உள்ள பாலத்தால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.  கமுதி-  அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் 5 கிமீ தூரத்தில் உள்ள விலக்கு சாலையிலிருந்து சுமார் 2 கிமீ சாலை சேதமடைந்து மிகவும் மோசமாக உள்ளது. குறுகலான இச்சாலையில் 4 பாலங்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலங்கள் என்பதால் இவையும் மிக மோசமான உள்ளது. இதில் 2 பாலங்களின் தடுப்புச்சுவர் மிகவும் சிறியதாக உள்ளது.

குறிப்பாக மண்டலமாணிக்கம் பகுதியிலிருந்து நாராயண காவேரி ஆற்றின் மீதுள்ள பாலத்தில் உள்ள சிறிய தடுப்பு சுவரால் வாகனஓட்டிகள் அச்சத்துடனே பயணம் செய்கின்றனர். இங்குள்ள தளவநாயக்கன்பட்டி, நெடுங்குளம், புளிச்சிகுளம், திருச்சிலுவையாபுரம், உடைகுளம் உள்பட பல்வேறு கிராமமக்கள் இச்சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியிலுள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கமுதி, அருப்புக்கோட்டைக்கு கொண்டு செல்ல இச்சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

கனரக வாகனங்கள் செல்லும் போது இப்பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. வயல்வெளியில் இருந்து 10 அடி உயரத்தில் இப்பால சாலை இருப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இரவுநேரங்களில் அதிகளவு விபத்துகள் நடக்கிறது. எனவே இச்சாலையை சீரமைத்து, பாலங்களில் உயரமான தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kamuti , Kamuthi,Small bridge, Two Wheeler
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் –...