×

வரத்து குறைந்ததால் தேங்காய் விலை கடும் உயர்வு

சேலம் : தமிழகம் மற்றும் கேரளாவில் தேங்காய் விளைச்சல் குறைந்ததால், மார்க்கெட்டுக்கு வரத்து சரிந்துள்ளது. இதன் காரணமாக தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சேலம், தர்மபுரி, ஈரோடு, காங்கேயம், உடுமலைப்பேட்டை, கோபிச்செட்டிபாளையம், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. கேரளா மாநிலத்திலும் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய் இந்தியாவில் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த நான்கு மாதமாக தமிழகம் மற்றும் கேரளாவில் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக தேங்காய் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சேலம் கடைவீதி தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் தேங்காய் விற்பனைக்கு வரும். கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக அனைத்து பகுதிகளிலும் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 டன் மட்டுமே வருகிறது. வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.8க்கு விற்ற சிறிய சைஸ் தேங்காய், கடந்த சில நாட்களாக ரூ.12 முதல் ரூ.14 வரையும், ரூ.12க்கு விற்ற நடுத்தர சைஸ் தேங்காய் ரூ.16 முதல் ரூ.20 எனவும், ரூ.20க்கு விற்ற பெரிய சைஸ் தேங்காய் ரூ.22 முதல் ரூ.25 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. நடப்பு மாதத்தில் நவராத்திரி விழா, ஆயுதபூஜை விழா கொண்டாடப்படுகிறது.  இந்த இரு விழாவிற்கும் தேங்காய் தேவை அதிகரிக்கும். அப்போது தேங்காயின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு தேங்காய் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலை குறையும். அதுவரை தேங்காய் விலை குறைய வாய்ப்பில்லை.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.


Tags : Coconut, price Increases, people Shocked, salem
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...