×

ஏலகிரியை போன்ற சமசீதோஷ்ண நிலை, இயற்கையை ரசிக்கும் இடங்கள் அரவட்லா மலை சுற்றுலா தலமாக்கும் திட்ட பணிகள் பாதியில் நிறுத்தம்

*வேலூர் மாவட்ட மக்கள் ஏமாற்றம்


வேலூர் : பேரணாம்பட்டு அரவட்லா மலை கிராமம் சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான திட்ட பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தின் சுற்றுலா வரைபடத்தில் ஒருங்கிணந்த வேலூர் மாவட்டம் மிக முக்கியமான இடத்தை பிடித்து இருந்தது. இதனால் மாவட்டத்துக்கு சாதாரண நாட்களில் நாள்தோறும் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பேர் வரையும், விடுமுறை நாட்களில் 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரையும் வெளியூர், வெளிமாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா  பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுடன் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக வந்து செல்பவர்களும் உள்ளனர்.


alignment=



இதனால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் நகரிலும், வேலூர் கோட்டை வளாகத்திலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் பேரணாம்பட்டு ஒன்றியம்  ஆந்திர, கர்நாடக எல்லையை ஒட்டிய மலை கிராமமான அரவட்லா மலை கிராமத்தை சுற்றுலா தலமாக்குவது தொடர்பாக அப்போதைய கலெக்டர் ராமன் அறிவித்ததுடன் அதற்கான நடவடிக்கையிலும் இறங்கினார். மலைகள் சூழ்ந்த அழகான இக்கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் வீரப்ப ஏரி, கடலப்ப ஏரி, சாம ஏரி என ஆண்டு முழுவதும் வற்றாத மூன்று ஏரிகளும், 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவன் கோயிலும், அதனுடன் இணைந்த  வற்றாத தாமரை குளமும் உள்ளன. தற்போது இக்குளத்தை சுற்றி ரூ.3.23 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு மூன்று ஏரிகளிலும் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு உல்லாச படகு சவாரி செய்வதற்கான படகு இல்லம், ஏரிகளை ஒட்டி பூங்காக்கள், உயர்கோபுர பார்வை மாடம், மீன்  காட்சியகம் என பல்வேறு பணிகள் சுற்றுலாத்துறை மூலமும், மாவட்ட பொது நிதி, ஒன்றிய பொது நிதி, அரசின் சிறப்பு நிதி மூலமும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இப்பணிகள் தொடங்கி நிறைவடையும்பட்சத்தில் மாவட்டத்தில் ஏலகிரிக்கு அடுத்து சுற்றுலா பயணிகளை கவரும் சிறந்த தலமாக அரவட்லா மலை கிராமம் விளங்கும்.

அதோடு இக்கிராமம் மற்றும் அதை சார்ந்த 6 கிராமங்களை  சேர்ந்தவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கும். அதோடு இந்த கிராமத்துக்கு ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் எளிதில் வரும் வகையில் சாலை வசதிகளும் அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இதனால் இப்பகுதியே வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் என்ற நம்பிக்கை மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்தது. அதற்கேற்ப சிவன் கோயில் தாமரை குளம் சீரமைப்பு பணிகள் முடிந்ததும், ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளும் நடந்தன. ஆனால் என்ன காரணத்தாலோ மேற்கண்ட பணிகளுடன் சுற்றுலா தலமாக்கும் திட்டம் அப்படியே நின்று போனது. இந்த நிலையில் கால்நடை மருத்துவமனை, மேய்ச்சல் நிலம் தொடர்பாக கடந்த வாரம் கலெக்டர் சண்முகசுந்தரம் அரவட்லா மலை கிராமத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.


alignment=



கலெக்டரின் வருகையால் அரவட்லா மலை கிராம மக்களிடம் மீண்டும் சுற்றுலா தலமாக்கும் திட்டம் தொடர்பான நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால், கலெக்டர் சண்முகசுந்தரம் அரவட்லா மலை கிராம ஆய்வின்போது, சுற்றுலா தலமாக்கும் திட்டம் குறித்து பேச்சே எழவில்லை என்று வேதனை தெரிவித்தனர் கிராம மக்கள். இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, ‘கலெக்டர் இங்கு வந்தபோது திட்டம் தொடர்பாக விசாரித்துள்ளார். அப்போது இந்த கிராமத்தை சுற்றுலா தலமாக்கும் பணிகளை மேற்கொண்டால், சுற்றுலா பயணிகள் யாரும் வரமாட்டார்கள். குடிமகன்களின் கூடாரமாகவே இது மாறிவிடும். அதனால் அதுபோன்ற திட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது எங்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது. ஏலகிரியில் கூட குடிமகன்கள் வந்து செல்கிறார்கள். அதற்காக ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என்றா கூறுகிறார்கள்?’ என்றனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அரவட்லாவில் கலெக்டரின் ஆய்வின்போது வெறும் மேய்ச்சல் நிலம், கால்நடை மருந்தகம் தொடர்பாகவே ஆலோசனை நடந்தது. சுற்றுலா தலம் என்ற பேச்சே எழவில்லை. அதேநேரத்தில் இத்திட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு அக்கறையில்லை என்பதை தெரிந்து கொண்டோம்’ என்றனர். ஏற்கனவே ஒருங்கிணைந்த மாவட்டத்தில் சுற்றுலாதலமாக இருந்த ஏலகிரியும் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் சென்று விட்டதால் வேலூர் மாவட்டத்தில் ஏலகிரியை ஒத்த சமசீதோஷ்ண நிலை, இயற்கை ரசிக்கும் இடங்கள் என நிறைய  அம்சங்களுடன் உள்ள அரவட்லா மலை கிராமத்தை சுற்றுலா தலமாக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்  என்பதுதான் மாவட்ட மக்களின் கோரிக்கை.  

மாவட்டம் பிரிப்பால் வேலூருக்கு இழப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது, கல்வி, ஆன்மிகம், மருத்துவம், பொழுதுபோக்கு என சுற்றுலாவின் அனைத்து  அம்சங்களும் அடங்கியிருந்தன. குறிப்பாக அமிர்தி சிறு வன உயிரியல் பூங்கா,  ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, காவலூர்  வானியல் தொலைநோக்கி மையம், ஆற்காடு திருப்பான்மலை, மகேந்திரவாடி குகைக்கோயில்கள் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இடங்களில் ஏலகிரியும், ஜலகாம்பாறையும், காவலூர் வானியல் தொலைநோக்கி மையமும் திருப்பத்தூருக்கும், ஆற்காடு திருப்பான்மலை, மகேந்திரவாடி குகைக்கோயில்கள் ராணிப்பேட்டைக்கும் சென்று விட்டன.

அதேபோல் வேலூர் பொற்கோயில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில், அருங்காட்சியகங்கள், பெரியார் பூங்கா உள்ளடங்கிய கோட்டை வளாகம்,  வள்ளிமலை முருகன் கோயில் மற்றும் அங்குள்ள சமணத்தடங்கள், திருவலம் வில்வநாதீஸ்வரர், பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம், பாலமதி, மகாதேவமலை ஆகியவற்றை தவிர்த்து, சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், திருப்பாற்கடல் ரங்கநாதர், ரத்தினகிரி போன்ற ஆன்மீக தலங்கள் ராணிப்பேட்டைக்கு சென்று விட்டன.

Tags : Climate change ,Yelagiri , Vellore,Aravatla Hill, Tourist Spot
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு