×

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம்

சத்தியமங்கலம் :  சத்தியமங்கலம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.  சத்தியமங்கலம் அடுத்துள்ள கே.என். பாளையம் காமராஜ் நகர் குட்டை தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி மகேஷ்குமார். இவரது தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. மகேஷ்குமார் தனது தோட்டத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.  நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது தோட்டத்து வீட்டின் முன்பு கால்நடைகளை கட்டி வைத்திருந்தார். அப்போது, கால்நடைகள் அருகே இருந்த நாய் குரைத்த சத்தம் கேட்டு மகேஷ்குமார் எழுந்து வந்து பார்த்தார். அப்போது நாயின் கழுத்தை சிறுத்தை கவ்வியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மகேஷ்குமார் சத்தம் போட்டதையடுத்து சிறுத்தை, நாயை விட்டுவிட்டு தப்பியோடி வனத்துக்குள் சென்று மறைந்தது. சிறுத்தை கடித்ததால் நாயின் கழுத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து மகேஷ்குமார் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் பெர்னாட் தலைமையிலான வனத்துறையினர் சிறுத்தை நடமாடும் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது சிறுத்தையின் கால் தடம் பதிவானதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, மகேஷ்குமார் தோட்டத்தில் சிறுத்தை நடமாடிய பகுதியில் நேற்று வனத்துறை சார்பில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


Tags : Satyamangalam , Leopard is roaming in Satyamangalam Area
× RELATED சத்தியமங்கலம் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு