×

ஓசூர் அருகே சாலையோர புதரில் தங்க நாணயத்தை தேடி சாலையில் குவிந்த மக்கள்

*பித்தளை என தெரிந்ததால் ஏமாற்றம்

ஓசூர் : ஓசூர் அருகே புதரில் தங்க நாணயம் கிடப்பதாக தகவல் கிடைத்ததால் ஏராளமானோர் குவிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடைசியில் பித்தளை என தெரிந்ததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூரில் காவலர் குடியிருப்பு எதிரே, கர்நாடக மாநிலம் சர்ஜாப்புரம் செல்லும் சாலையோரம் புதர் மண்டி காணப்படுகிறது. இப்பகுதியில் தங்க நாணயம் கிடப்பதாக நேற்று தகவல் பரவியது. இதனால், அப்பகுதியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். நேற்று முன்தினம் பெய்த மழையால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் சேற்றில் கைகளை விட்டு தங்க நாணயத்தை மக்கள் தேடினர்.

இதில், ஒரு சிலருக்கு சிறிய அளவிலான நாணயம் கிடைத்தது. கையில் கிடைத்த நாணயத்துடன் சிலர், அங்கிருந்து நழுவினர். ஆனால், நாணயம் கிடைக்காதவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டவாறு தேடிக்கொண்டிருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த, பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போக்குவரத்தை சீரமைத்து பொதுமக்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தாசில்தார் செந்தில்குமார் கூறுகையில், தங்க நாணயம் சாலையோரத்தில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அவர்கள் கைப்பற்றிய சில நாணயங்களை, தங்க நகை வேலைப்பாடுகள் செய்யும் நபர்களிடம் வழங்கி ஆய்வு செய்து பார்த்தோம். இதில், அந்த நாணயங்கள் பித்தளை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பொதுமக்களிடம் தெரிவித்த பின்பே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் என்றார்.

Tags : road ,search ,roadside bush ,Hosur , Hosur, Brass, gold coins, search operation
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...