×

ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது டெல்லி

ஷார்ஜா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், அணி டெல்லி கேப்பிடல்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் அங்கித் ராஜ்பூட், டாம் கரன் நீக்கப்பட்டு வருண் ஆரோன், ஆண்ட்ரூ டை (அறிமுகம்) இடம் பெற்றனர். டெல்லி அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது.
 பிரித்வி ஷா, தவான் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். தவான் 5 ரன், பிரித்வி 19 ரன் (10 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் நடையை கட்டினர். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன் (18 பந்து, 4 பவுண்டரி), ரிஷப் பன்ட் 5 ரன் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

 டெல்லி அணி 79 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சரிவை சந்தித்த நிலையில், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 39 ரன் விளாசி (30 பந்து, 4 சிக்சர்) நம்பிக்கை அளித்தார். அவர் திவாதியா பந்துவீச்சில் ஸ்மித் வசம் பிடிபட்டார். ஹெட்மயர் சிக்சர்களாகப் பறக்கவிட, டெல்லி ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அவர் 45 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி தியாகி பந்துவீச்சில் திவாதியா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹர்ஷல் பட்டேல் 16, அக்சர் பட்டேல் 17 ரன் எடுத்து வெளியேறினர். டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. ரபாடா (2), அஷ்வின் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆர்ச்சர் 4 ஓவரில் 24 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். கார்த்திக் தியாகி, ஆண்ட்ரூ டை, திவாதியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

 இதைத் தொடர்ந்து, 20 ஓவரில்185 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் துரத்தலை தொடங்கினர். பட்லர் 13 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் தவான் வசம் பிடிபட, ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
இந்த அணியில் ஸ்டீவன் ஸ்மித் 24 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்ஸர்), ராகுல் திவாடியா 38 ரன் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்தனர். சாம்சன் (5), மகிபால் லோம்ரார் (1), ஆண்ட்ரூ டை (6), ஜோப்ரா ஆர்ச்சர் (2), கோபால் (2), வருண் ஆரூண் (1) என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கார்த்திக் தியாகி 2 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அனைத்து ஓவர்களும் முடிந்த நிலையில் இந்த அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

Tags : Delhi ,Rajasthan , Falling Rajasthan Delhi topped the list
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை