பனங்காட்டுப்பாக்கம் சந்திப்பில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் சந்திப்பில், புதிய புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.காயார் காவல் நிலைய எல்லையில் அடங்கிய பனங்காட்டுப்பாக்கம், கொளத்தூர், புங்கேரி ஆகிய பகுதிகளிலும், மாம்பாக்கம் - காயார் சாலையிலும்  கடந்த சில நாட்களாக மக்கள் தொகையும், வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இதனால், இப்பகுதியில் குற்றச் சம்பவங்களும்,  விபத்துகளும் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதையொட்டி, பனங்காட்டுப் பாக்கம் - கொளத்தூர் சந்திப்பில் புதிய புறக்காவல் நிலையம் அமைக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.காயார் காவல்  நிலையம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது, ஒரு எஸ்ஐ, 2  எஸ்எஸ்ஐ, 7 காவலர்கள் நியமிக்கப்பட்டனர். 20  பணியிடங்கள் இருந்தாலும் 10  பேர் காவல் நிலையத்தை பராமரித்தனர். தற்போது காயார் கிராமத்தில்  உள்ள சமுதாயக் கூடத்தில், இந்த காவல்  நிலையம் தற்காலிகமாக செயல்படுகிறது.

 பலரும் பணியிட மாற்றம் கேட்டு சென்று விட்டதால், தற்போது இங்கு 1 பெண் எஸ்ஐ மற்றும் 2 போலீசார் மட்டுமே உள்ளனர். இந்த காவல்  நிலையத்தின் கீழ் 12 கிராமங்கள் உள்ளன. போதிய  போலீசார் இல்லாததால் இரவு ரோந்து பணி, ஏடிஎம் கண்காணிப்பு ஆகியவற்றை செயல்படுத்த  முடியாத நிலை உள்ளது.இந்தவேளையில், பனங்காட்டுப்பாக்கம், கொளத்தூர் சாலை சந்திப்பில் புதிய புறக்காவல் நிலையம் அமைத்து, அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.  திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். காயார் எஸ்ஐ சுசீலா வரவேற்றார். மாமல்லபுரம் கூடுதல் எஸ்பி சுந்தரவதனம்,  புதிய புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். டைமண்ட் குழுமத் தலைவர் மோகன்ராஜ் கல்வெட்டை திறந்து வைத்தார்.  இதில், பாமக ஒன்றிய  செயலாளர் அருண்குமார், மாவட்ட துணைச்செயலாளர் காயார் ஏழுமலை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோட்டீஸ்வரன், அதிமுக ஊராட்சி  செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் அமைத்த மையம்

போலீசாரின் பற்றாக்குறையால், புறக்காவல் நிலையம் அமைப்பதில் இழுப்பறி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, பொதுமக்கள் சார்பில், இடத்தை தேர்வு  செய்து, அவர்களே அதற்கான பணம் செலவு செய்து, புறக்காவல் நிலைய கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளனர். இதற்கிடையில், காயார் காவல்  நிலையத்தில் 3 பேர் மட்டுமே பணியில் உள்ளதால், புதிய புறக்காவல் நிலையத்தை திறந்தாலும், அங்கு 24 மணி நேரமும் போலீசார் இருக்க  முடியாத நிலையே உள்ளது. காவல் நிலையத்திலேயே போலீசார் இல்லாதபோது புறக்காவல் நிலையத்திற்கு எப்படி போலீசாரை அனுப்ப முடியும்  என்று தெரியவில்லை. எனவே, காயார் காவல் நிலையத்தில் கூடுதலாக ஒரு எஸ்ஐ, 2 எஸ்எஸ்ஐ, 10 போலீசாரை நியமிக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories:

>