×

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ காதல் திருமண விவகாரம் சவுந்தர்யா விருப்பப்படி கணவருடன் செல்லலாம்: ஐகோர்ட் அனுமதி

சென்னை: ஆட்கொணர்வு வழக்கில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு திருமணம் செய்துகொண்ட சவுந்தர்யாவும் அவரது தந்தையும் உயர்  நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்கள். அவர்களிடம் நடந்த விசாரணைக்கு பிறகு சவுந்தர்யாவை அவரது கணவருடன் செல்ல அனுமதி அளித்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர். கள்ளக்குறிச்சி தனி தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கும் பிரபுவும், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள்  சவுந்தர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருச்செங்கோடு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சவுந்தர்யாவின் காதலை பெற்றோர்  ஏற்காத நிலையில், அக்டோபர் 1ம் தேதி திடீரென மாயமாகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபுவும் சவுந்தர்யாவும் திருமணம் முடித்ததாக அவர்களின் புகைப்படத்தையும், சவுந்தர்யா வீட்டில்  மறுத்ததால் வீட்டைவிட்டு வெளியேறி தன்னை முழு மனதுடன் திருமணம் செய்துகொண்டதாகவும் பிரபு வீடியோ வெளியிட்டார். இதையடுத்து,  அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்துதான் தன் மகளை கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டு கடத்தியவர்கள்  மீது நடவடிக்கை கோரி சுவாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவால் கடத்தப்பட்டதாகவும்,  மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்  செய்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் ஆகியோர், சவுந்தர்யாவையும் அவரது தந்தையையும் நேரில் ஆஜர்படுத்துமாறு  கள்ளக்குறிச்சி தியாகதுருகம் போலீசுக்கு உத்தரவிட்டனர்.  இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுந்தர்யாவும் அவரது தந்தை சாமிநாதனும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையடுத்து, சவுந்தர்யாவிடம் நீதிபதிகள் திருமணம் தொடர்பான  கேள்விகளை கேட்டனர். திருமணத்திற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக சுவாமிநாதன் தெரிவித்தார். இருவரிடமும் நடந்த விசாரணைக்கு பிறகு  இருவரும் கலந்து பேசி தங்களின் முடிவை தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, சாமிநாதன் நீதிமன்ற அறை அருகே தனது மகளுடன் பேசினார். சிறிது நேரத்திற்கு பிறகு நீதிபதிகள் முன் இருவரும் மீண்டும்  ஆஜராகினர்.  அப்போது, தன்னை யாரும் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தவில்லை. எனது விருப்பப்படியே திருமணம் செய்துகொண்டேன். எனவே,  கணவருடனே செல்ல விரும்புகிறேன் என்று நீதிபதிகளிடம் சவுந்தர்யா தெரிவித்தார். இதையடுத்து, கணவருடன் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்ட  நீதிபதிகள் ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Saundarya ,Kallakurichi MLA ,iCourt , False MLA love marriage affair Saundarya can go with her husband at will: iCourt permission
× RELATED கடன் பிரச்சனையில் தவித்ததால் மனைவி சேலையில் தூக்கிட்டு கணவன் பரிதாப சாவு