×

மத்திய அரசு திடீர் அறிவிப்பு தொல்லியல் துறை படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் சேர்ப்பு: தெலுங்கு, கன்னடம், மலையாளமும் இடம் பெற்றன

புதுடெல்லி: தொல்லியல் துறை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழியையும் இணைத்து மத்திய அரசு புதிய அட்டவணை  வெளியிட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில், ‘பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல்  கல்லூரி,’ இயங்கி வருகிறது. அங்கு துறை சார்ந்த  இரண்டு ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இதில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம்  பெற்றவர்கள் மட்டுமே விண்ணபிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது, மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழ் மொழி ஆர்வலர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு கடும்  கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக, தமிழ் மொழி மீது திட்டமிட்டு கலாச்சார படையெடுப்பு நடத்தப்படுவதாக திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின்  குற்றம்சாட்டினார். மேலும், அனைத்து விவகாரத்திலும் மத்திய அரசு தொடர்ந்து தமிழ் மொழி மீது பாரப்பட்சம் காட்டி வருவதாகவும் அவர்  தெரிவித்தார்.இந்த சர்ச்சைகளுக்கு இடையே தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்து, தொன்மையான வரலாறு உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில்,  தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்கும்படி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  முன்தினம் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், மத்திய அரசு நேற்று திடீரென ஒரு புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதில், ‘மத்திய  தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப் பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதே போன்று சமஸ்கிருதம், கன்னடம்,  தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, பராகிரித், அரபிக், பாரசீகம் உள்ளிட்ட செம்மொழிகளும் சேர்க்கப்பட்டு உள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.

* பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியை கடந்த ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
* இதில் இரண்டு ஆண்டு முதுகலை பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
* இப்படிப்பில் சேர எழுத்துத் தேர்வு மூலம் 15 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



Tags : Federal Government ,Tamil ,Kannada , Federal Government Sudden Notice For the study of the Department of Archeology Tamil enrollment in Educational Qualification: Telugu, Kannada, Malayalam also took place
× RELATED உகாதி திருநாளை முன்னிட்டு தெலுங்கு,...