நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 9.5% சரியும் கடன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: குறுகிய கால கடன் வட்டியில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம் நடத்துகிறது. இதில் இடம்பெற்றுள்ள 6 உறுப்பினர்களில்,  பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் உள்ளிட்ட கொள்கை முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 6 உறுப்பினர்களில் 3 பேர் ரிசர்வ் வங்கியில் இருந்தும், 3 பேர் அரசால் நியமிக்கப்படும் பொருளாதார நிபுணர்களும் இடம்பெறுவார்கள். கடந்த 2016ம்  ஆண்டு முதல் இந்த நடைமுறை உள்ளது. பொருளாதார நிபுணர்களின் பதவிக்காலம் முடிவடைந்தும் புதிய உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கவில்லை. இதனால், முதல் முறையாக,  25வது நிதிக்கொள்கைக் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த ரிசர்வ் வங்கி, 3 பேர் நியமனத்துக்குப் பிறகு கடந்த 7ம் தேதி, ரிசர்வ் வங்கி   கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் துவங்கியது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட  முக்கிய முடிவுகள் வருமாறு:நிதிக்கொள்கை குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள், கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் தேவையில்லை என ஒரு மனதாக கருத்து  தெரிவித்துள்ளனர். அதன்படி, குறுகியகால கடன் வட்டியான ரெப்போவட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இது 4 சதவீதமாகவே  நீடிக்கிறது. இதுபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாக நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம்  கடும் சரிவைச் சந்தித்தது. இருப்பினும், கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எனவே, நம்பிக்கையூட்டும் விதத்தில் மீட்சிக்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. எனவே, கட்டுப்பாடுகளில் இருந்து, பொருளாதாரம் மீள்வதற்கான  செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதம் சரியும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.பண வீக்கம் ரிசர்வ் 4 சதவீதமாக  இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பண வீக்கம் அதிகபட்சமாக 6 சதவீதமாகவும் குறைந்த பட்சமாக 2  சதவீதமாகவும் இருக்கலாம். நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் பண வீக்கம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்குள் வர வாய்ப்புகள் உள்ளன. அப்போது,  பொருளாதாரம் பாதிப்பில் இருந்து மீண்டு, வளர்ச்சிப் பாதைக்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

டிசம்பர் மாதம் முதல் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் வசதி

ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணம் அனுப்ப என்இஎப்டி பரிவர்த்தனை வசதி உள்ளது. இதுபோல் மொபைல் போன்  மூலம் யுபிஐ முறையில் பணம் அனுப்பப முடியும். இருப்பினும் அதிக மதிப்பிலான உடனடி பணப் பரிவர்த்தனைகளை ஆர்டிஜிஎஸ் மூலமாக  வர்த்தகர்கள் மேற்கொள்கின்றனர். குறைந்தபட்சம் ₹2 லட்சம் முதல் அதிகபட்சம் ₹10  லட்சம் வரை பணம் அனுப்பலாம். தற்போது இந்த வசதியை,  திங்கள் முதல் சனிக்கிழமை வரை வங்கி வேலை நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். வங்கி வார விடுமுறை நாட்கள், 2வது, 4வது  சனிக்கிழமைகளில்  இந்த வசதி கிடையாது. இந்நிலையில் வர்த்தகர்கள், நிறுவனங்கள் பலன் பெறும் வகையில், அனைத்து நாட்களும் 24 மணி  நேரமும் இந்த வசதியை செயல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் வங்கிகளில் இந்த வசதி அமலுக்கு வரும் என  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்கள் ஏமாற்றம்

கொரோனா பரவல் காரணமாக தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. ஊரடங்கு தளர்வுகள் அறிவித்தும் முழுமையாக மீள முடியவில்லை. 6 மாத  தவணை சலுகையை பெரும்பாலான தொழில்துறையினர் பயன்படுத்தியுள்ளனர். இதனால் கடன் சுமைதான் அதிமாகியுள்ளது. எனவே, ரிசர்வ் வங்கி  ஊக்க சலுகை அறிவிப்புகளை அறிவிக்கும் என தொழில்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால், தொழில்துறை சலுகைகள் பற்றி ரிசர்வ் வங்கி  தெரிவிக்காதது, தொழில்துறையினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>