×

முழு அரசு மரியாதையுடன் பஸ்வானின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

புதுடெல்லி: மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு, அவரது சொந்த ஊரான பாட்னாவில் இன்று முழு அரசு மரியாதையுடன்  இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வான் (74)  உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு இறந்தார். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக  உடல் வைக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேற்று நேரில்  சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘ராம் விலாஸ் பஸ்வானுக்கு மரியாதை செலுத்துகிறேன். சமூக நீதிக்காக அவர் ஆற்றிய உறுதியான  அர்ப்பணிப்பு எப்போதும் நினைவு கூரத்தக்கது,’ என கூறியுள்ளார்.

 பஸ்வானுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம், டெல்லியில் நேற்று கூடியது. இதில், இரங்கல் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. மேலும், அவருடைய இறுதிச்சடங்கில் மத்திய அரசின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் கலந்து கொள்வார் என  அறிவிக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள், தொண்டர்களின் அஞ்சலிக்கு பிறகு, பஸ்வான் உடல் அவருடைய சொந்த ஊரான பீகார் தலைவர் பாட்னாவுக்கு எடுத்து  செல்லப்பட்டது. அங்கு, முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், பஸ்வானின் மகனான சிராக் பஸ்வானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மிகச்  சிறந்த தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரை நாடு இழந்து விட்டது. அவர் எப்போதும் ஏழைகள், நலிவடைந்த மக்களின் நலனுக்காக பாடுபட்டார்,’ என  கூறியுள்ளார்.  ராகுல் எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில்,  ‘பீகார் மட்டுமின்றி, நாட்டின் அரசியல் மற்றும் பொதுச் சேவையில்  முத்திரை பதித்தவர். ஒரு மூத்த  தலைவரை நாங்கள் இழந்து விட்டோம்,’ என கூறியுள்ளார்.

Tags : President ,Paswan ,Delhi , With full government respect Funeral service for Baswan's body today: President, Prime Minister pays tribute in Delhi
× RELATED தேர்தல் அறிக்கையில் வார்த்தை ஜால...