×

பஞ்சாப்பை பந்தாடி பட்டியலில் 3வது இடம் பிடித்தது சன்ரைசர்ஸ்... பேர்ஸ்டோவுடன் பேட்டிங் செய்வதை ரசிக்கிறேன் : கேப்டன் வார்னர் பேட்டி

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 13வது ஐபிஎல் தொடரில் அபுதாபியில் நேற்று இரவு நடந்த 22வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கேப்டன் வார்னர்- பேர்ஸ்டோ  அதிரடியாக பேட்டிங்கை தொடங்கினர். இருவரும் அரைசதம் விளாசியதில் ஐதராபாத் 10 ஓவரில் 100 ரன்னை தொட்டது. 15.1 ஓவரில் அணியின் ஸ்கோர் 160ஆக இருந்தபோது வார்னர் 52 ரன்னில்(40 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.  அதே ஓவரில் பேர்ஸ்டோ 97 ரன்னில் (55 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார். பின்னர் வந்த மனிஷ்பாண்டே 1, அப்துல் சமத் 8, பிரியம் கார்க் 0 என ஆட்டம் இழந்தனர். 20 ஓவரில் ஐதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன் குவித்தது. வில்லியம்சன் 20 ரன்னில் (10 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 202 ரன் இலக்கை துரத்திய பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் 9, கே.எல்.ராகுல் 11, மேக்ஸ்வெல் 7 ரன்னில் ஆட்டம் இழந்தனர். தனிநபராக போராடிய நிகோலஸ் பூரன் 77 ரன்னில் (37 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்) ரஷித்கானின் பந்தில் கேட்ச் ஆனார். அத்துடன் பஞ்சாப் நம்பிக்கை சரிந்தது. மன்தீப் சிங் 6, முஜிப் உர் ரகுமான்1, பிஷ்னோய் 6 ரன்னிலும், ஷமி, காட்ரெல். ஹர்ஸ்தீப் சிங் ஆகியோர் டக்அவுட்டும் ஆகினர்.  
16.5 ஓவரில் பஞ்சாப் 132 ரன்னில் சுருண்டது. இதனால் ஐதராபாத்  69 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஷித்கான் 3, நடராஜன், கலீல் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 6வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது 3வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் 6வது போட்டியில் 5வது தோல்வியை சந்தித்தது. பேர்ஸ்டோவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறியதாவது:  நிக்கோலஸ் அதிரடியாக ஆடியதால் பதற்றமாக இருந்தது. நான் அவருடன் வங்கதேசத்தில் விளையாடினேன். அப்போது அவரின்  அதிரடியை பார்த்துள்ளேன். ரஷித்கான் சிறப்பாக பந்துவீசினார். அவர் ஒரு உலக தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் எங்கள் அணியில் இருப்பது மிகவும் நல்லது. அழுத்தமான சூழ்நிலைகளில் அவர் சிறப்பாக செயல்படுவார். புவனேஸ்வர்குமார் விலகியது ஏமாற்றம் மற்றும் வருத்தம் அளிக்கிறது. டெத் ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சாளர் வெளியேறியது மற்றவர்களுக்கு வாய்ப்பை அளிக்கிறது. அதனை நாங்கள் சரி செய்வோம். பேர்ஸ்டோவுடன் பார்ட்னர் ஷிப் நன்றாக உள்ளது. ரன் எடுக்க ஓடுவதையும், நாங்கள் ஒன்றாக பேட்டிங் செய்வதை மிகவும் ரசிக்கிறேன் என்றார்.

பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், நாங்கள் பவர் பிளேயில் விக்கெட்டுகளை இழப்பது கடினமாக இருக்கும். 6 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆடும்போது இது சிக்கலை ஏற்படுத்தும். மயங்க் ரன்அவுட் சிறந்த தொடக்கமல்ல. அது பேரழிவு. நாங்கள் தூக்கி அடித்த பந்து அனைத்தும் பீல்டர்களின் கைகளுக்கு சென்றன. தொடக்கத்தில் ஐதராபாத் 230 ரன்னுக்கும் அதிகமாக பெறும் என நினைத்தேன். ஆனால் கடைசி நேரத்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். பூரன் நன்றாக பேட்டிங் செய்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் பயன்படுத்திக்கொள்கிறார். எல்லோரும் கடுமையாக உழைக்கிறார்கள், அணிக்காக பங்களிக்க விரும்புகிறார்கள். கடந்த காலத்தில் தங்களை நிரூபித்துள்ளனர், சில நேரங்களில் அது வராது, ஆனால் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், என்றார்.

இந்த ெவற்றி முக்கியமானது

ஆட்டநாயகன் பேர்ஸ்டோவ் கூறியதாவது: இன்று நான் 3வது அரைசதம் அடித்ததால் மகிழ்ச்சி அடைந்தேன். வார்னருடன் பேட்டிங் செய்வது வேடிக்கையானது. அவர் தரமான வீரர். அவர் 50வது அரைசதம் அடித்துள்ளார். அது அவரின் சாதனை பேசும். இந்திய பிட்ச்சுகளில் இருந்து இங்கு மாறுபட்டவையாக உள்ளது. வெப்பநிலை மிகவும் வித்தியாசமானது. இந்த வெற்றி எங்களுக்கு கிடைப்பது முக்கியமானது. ரஷித்கான் தந்திரமான பந்துவீச்சாளர். அவர் எப்போதும் போட்டியில் தாக்கம் ஏற்படுத்துவார், என்றார்.



Tags : Punjab ,Sunrisers ,Warner ,Burstow , Punjab, Sunrisers, Burstow, batting, captain, Warner
× RELATED நான் ரெடி தான்… கம்மின்ஸ் உற்சாகம்