ஈரோடு: தமிழகத்தில் உள்ள மக்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளதால், 2021 மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி உள்ளவரை அவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் இருவருடனும் திடீர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியுள்ளார்.
ஈரோட்டில் மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகன விற்பனையாகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,2021 சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அவர்தான் முதல்வர். இதனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.மாற்ற முடியாது. முதல்வர் வேட்பாளரை அறிவித்ததில் எந்த சிக்கலும் இல்லை. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் நேர்மையும், திறமையானவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.