×

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் அதிமுக தனித்து போட்டி: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பு பேட்டி

திருத்துறைப்பூண்டி, : 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தையே நிறுத்தி தனித்து களம் காணுவோம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறி உள்ளார்.தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 32 ஆண்டுகளுக்கு பின் ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்தது என்ற சரித்திரத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படைத்தார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய வேண்டும் என்பதுதான் ஒரு தாயின் ஆசை. அந்த தாயின் ஆசையை நிறைவேற்றுகிற வகையில், 2021ல் நடைபெறும் பொதுத்ேதர்தலில் அதிமுக மீண்டும் தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும்.

சரித்திரத்தை முதல்வர் எடப்பாடி தலைமையில் ஓபிஎஸ் வழிகாட்டுதலுடன் நடத்திக் காட்டுவோம். அதிமுகவை பொறுத்தவரை தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியாக 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தையே நிறுத்தி தனித்துகளம் கண்டு ஆட்சியை பிடித்துகாட்டி இருக்கிறோம். எனவே, மக்களோடு கூட்டணி என்கிற முறையில் தேர்தலை நடத்திக் காட்டுவோம். இவ்வாறு ஓ.எஸ்.மணியன் கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய பாஜ முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 234 தொகுதிகளிலும் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : AIADMK ,constituencies ,elections ,OS Maniyan ,Tamil Nadu Assembly ,interview , Assembly Election, 234 constituency, AIADMK, Minister OS Maniyan, agitation
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...