×

உலகின் மிகவும் நீளமான அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் ராணுவ வாகனங்கள் முதல் பயணம்

மணாலி: உலகின் மிகவும் நீளமான அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை வழியாக ராணுவ வாகனங்களின் முதல் பயணம் தொடங்கியது. இமாசலபிரதேசத்தின் மணாலியில் இருந்து லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதியை இணைக்கும் வகையில் உலகில் மிகவும் நீளமான நெடுஞ்சாலை அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி கடந்த 3ம் தேதி திறந்து வைத்தார். 9.02 கிமீ நீளமுடைய இந்த நெடுச்சாலை சுரங்கப்பாதை மூலம் மணாலி-லே இடையே உள்ள பயண தூரம் 46 கிமீ குறைகிறது. இதனால் ஏற்கனவே உள்ள பயண நேரத்தில் 5 மணி நேரத்தை குறைக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த சாலை பனிக்காலத்தில் 6 மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதனால், லே மற்றும் இமாச்சலபிரதேச பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்பு படையினருக்கும், அவர்களின் போக்குவரத்திற்கும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆண்டு முழுவதும் செயல்பாட்டில் இருக்கும். இதனால் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்து மற்றும் ஆயுதங்களை எல்லைக்கு எளிதில் கொண்டு செல்ல அதிக நேரம் தேவைப்படாது.

இந்நிலையில், அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வந்து 5 நாட்கள் ஆன நிலையில் இந்திய பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் நேற்று முன்தினம் முதல் இந்த சுரங்கப்பாதை வழியாக தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. இமாச்சலின் மணாலியில் இருந்து லடாக்கின் லேவுக்கு அடல் சுரங்கப்பாதை வழியாக ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்றனர். அந்த வாகனங்களில் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், இந்த சுரங்கப்பாதையின் முக்கியத்துவத்தை விளக்க தேவையில்லை. அனைவராலும் புரிந்து கொள்ளப்படுகிறது. இது ரேஷன்கள், ஆயுதங்கள் மற்றும் பிற தளவாடங்களை விரைவாக கொண்டு செல்ல உறுதி செய்யும். பணியாளர்களையும் விரைவாக நிலைநிறுத்தவும் உதவும். இது எங்கள் எல்லைகளை பாதுகாப்பவர்களுக்கும், அப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : world ,highway tunnel ,Atal , Atal Highway, subway, military vehicles, travel
× RELATED சில்லி பாயின்ட்…