×

தமிழ் முதலிலேயே சேர்க்கப்படாதது ஏன்? எதிர்ப்புக்குரல்கள் எழுந்தால் தான் தமிழ் சேர்க்கப்படுமா? : நீதிபதிகள் காட்டம்!!

மதுரை: தொல்லியல் படிப்பில் தமிழ் முதலிலேயே சேர்க்கப்படாதது ஏன்? என மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

வழக்கின் பிண்ணனி

மத்திய தொல்லியல் முதுகலை பட்டய படிப்பிற்கான அறிவிப்பை ரத்து செய்து, தமிழையும் இணைத்து புதிய அறிவிப்பு வெளியிடக்கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்க துவங்கினர். அப்போது வக்கீல் அழகுமணி ஆஜராகி, மத்திய தொல்லியல்துறை சார்பில் முதுகலை பட்டய படிப்புகளுக்கான அறிவிப்பில் தமிழ்மொழியை புறக்கணித்தது தொடர்பாக முறையிட்டார். நீதிபதிகளிடம் அவர், ‘‘மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் இயங்குகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் தொல்லியல்துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்பிற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இந்த படிப்பிற்கு இந்திய வரலாறு, தொல்லியல்துறை, மானுடவியல் மற்றும் தொல்லியல் மொழிகளான சமஸ்கிருதம், பாலி மற்றும் அரபு மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 15 இடங்களுக்கு நவ. 8க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிப்பிற்கான கல்வித்தகுதியில் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.  மத்திய தொல்லியல்துறையின் தொல்லியல் படிப்புகளுக்கான அறிவிப்பை ரத்து செய்யவும், தமிழையும் இணைத்து முறையாக புதிதாக அறிவிப்பு வெளியிடக்கோரியும், அதுவரை சேர்க்கை நடைமுறைகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடக்கோரி வக்கீல் ரமேஷ்குமார் சார்பில் மனு செய்கிறோம். இதனை அவசர வழக்காக, உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘இன்றே (நேற்று) மனுவாக தாக்கல் செய்தால், நாளையே (இன்று) அவசர மனுவாக ஏற்று விசாரிக்கப்படும்’’ என்றனர். இதையடுத்து வக்கீல் ரமேஷ்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் சராமரி கேள்வி

இந்த நிலையில் தொல்லியல் படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ் முதலிலேயே சேர்க்கப்படாதது ஏன்? எதிர்ப்புக்குரல்கள் எழுந்தால் தான் தமிழ் சேர்க்கப்படுமா? எதன் அடிப்படையில் பாலி, பாரசீக மொழிகள் தொல்லியல்துறை அறிவிப்பில் சேர்க்கப்பட்டது? அறிவிப்பு வெளியிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி சரமாரியாக கேள்விகளை முன் வைத்தனர்.
மேலும், இது மொழிகள் உணர்வோடு தொடர்புடையவை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பழமையான மொழிகள் பற்றி அக்.18க்குள் தொல்லியல் துறை பதில் தர உத்தரவிட்டனர்.

Tags : protests ,Judges , Tamil, Judges, Kattam
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...