ஆதிவாசி கிராமத்திற்கு தார்ச்சாலை அமைக்க கோரிக்கை

பட்டிவீரன்பட்டி : பெரும்பாறை அருகேயுள்ள கூட்டப்பாறை ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் வண்டிப்பாதையை தார்சாலையாக மாற்ற ஆதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகே கூட்டப்பாறை ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து 2.5 கிமீ தூரத்தில் உள்ள நல்லூர்காடு என்ற ஊரிலிருந்து தான் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இப்பகுதிமக்கள் கால்நடையாக சென்று வாங்கி வருகின்றனர்.

இந்த வண்டிப்பாதை புதர் மண்டிய நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மேலும் கர்பிணிகள் மற்றும் நோயினால் அவதிப்படுபவர்களை டோலிகட்டி தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். டோலிகட்டி அழைத்து செல்வதால் ஏற்படும் காலதாமதத்தால் கர்ப்பிணிகள் பலர் இறந்துள்ளனர்.

நீண்ட காலமாக உள்ள இந்த வண்டிப்பாதையை, தார்சாலையாக மாற்றவும், தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ள பகுதியை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவும் கோரி பல முறை கலெக்டர், கொடைக்கானல் உதவி ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பகுதிமக்கள் நலன் கருதி இப்பகுதியில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: