×

தஞ்சை- மயிலாடுதுறை இடையே 70 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்சார ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட பணி மும்முரம்

தஞ்சை : தஞ்சை - மயிலாடுதுறை இடையே 70 கி.மீட்டர் தூரத்துக்கு மின்சார ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட பணி மும்முரமாக நடந்து வருகிறது.ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், டீசல் பயன்பாடு மற்றும் செலவினத்தை குறைக்கவும் ரயில் பாதைகள் மின்மயமாக்கும் பணிகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

அதன்படி 144 ஆண்டுகள் பழமையான மெயின் லைன் என்றழைக்கப்படும் தஞ்சை, கும்பகோணம் ரயில் பாதையில் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட விழுப்புரத்திலிருந்து- தஞ்சை வரை 228 கி.மீட்டர் தூரத்துக்கு உள்ள ரயில் பாதையில் ரூ.250 கோடி மதிப்பில் மின்சார ரயில் இயக்க பணிகள் கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது.

 இதில் முதற்கட்டமாக விழுப்புரம்- கடலூர் இடையே பணிகள் நிறைவு பெற்றது. பின்னர் கடலூர் - மயிலாடுதுறை இடையே 2வது கட்டமாக பணிகள் நடந்து இந்தாண்டு தொடக்கத்தில் ரயில்கள் இயக்க தடையில்லா சான்று பெறப்பட்டது. பின்னர் மூன்றாவது கட்டமாக மயிலாடுதுறை- தஞ்சை இடையே பணிகள் துவங்கியது.

இதில் தஞ்சை- மயிலாடுதுறை இடையே உள்ள 70 கி.மீட்டர் தூரத்தில் மின் கம்பங்கள் நட்டு மின்கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 25,000 வோல்ட் மின்சாரம் செல்வதால் தண்டவாளத்தின் குறுக்கே வைக்கோல்களை அதிகளவில் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டவாளத்தின் குறுக்கே சாலைகள் கடக்கும் இடத்தில் இரும்பாலான தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தஞ்சை- மயிலாடுதுறை இடையே 70 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்சார ரயில் இயக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.  பெங்களூருவில் உள்ள ரயில்வே பாதுகாப்பு ஆணையரால், இந்த மாத இறுதி வாரத்தில் தஞ்சை- மயிலாடுதுறை ரயில் பாதையில் ஆய்வு பணிகள் நடக்கிறது என்றார்.

Tags : phase ,Mayiladuthurai ,Tanjore , Tanjore: Final phase of operation of 70 km electric train between Tanjore - Mayiladuthurai
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...