ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல்-குளறுபடியால் விற்பனையாளர்கள் தவிப்பு

பரமக்குடி : மத்திய அரசு கொண்டு வந்த, ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தமிழகத்தில் கடந்த 1ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கைரேகையை பயன்படுத்தும் முறை அமல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக ரேசன் கடைகளில், கைவிரல் ரேகை பதிவு முறை பயன்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இயந்திரம் தரப்படும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிட்டனர்.

ஆனால் சில ரேசன் கடைகளில் நடைமுறையில் உள்ள  பி.ஓ.எஸ் இயந்திரத்தில்  மென்பொருள் டவுன்லோடு செய்து கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவியை இணைத்து பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளுக்கு வழங்கியுள்ளனர். ஆனால் தற்போது, எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் திடீரென ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று அறிமுகப்படுத்தியது. இதுதெரியாமல் பயனாளிகள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்காமல் திரும்பி சென்றனர்.

பயனாளிகள் இயந்திரத்தில் கைரேகை வைத்த போது, சரியாக வேலை செய்யாததால், எச்சரிக்கை என்ற வாசகம் வருகிறது. இதனால், ரேசன்  கடைகளில் பொது மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் பணியை விற்பனையாளர்கள் நிறுத்தினர். பிரச்னை குறித்து, வட்ட வழங்கல் அலுவலகம், தாலுக்கா பொறியாளர்கள் ஆகியோரிடம் புகார் அளித்து நடவடிக்கை இல்லாததால்.  பலர் ரேஷன் கடையை மூடிவிட்டு சென்றனர்.

ரேசன் கடை விற்பனையாளர்கள் கூறும்போது, ‘‘ரேசன் கடைகளில் ஒரே நாடு-ஒரே ரேசன் திட்டத்திற்கு புதிதாக செயலி வழங்காமல், பழைய இயந்திரத்தை பழுதுபார்த்து அதில் மென்பொருள் டவுன்லோடு செய்து கொடுத்துள்ளனர். இதனால், இயந்திரத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

எங்களுக்கு பழைய இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்கள் வழங்கினால் மட்டுமே அத்தியாவசிய பொருள்களை வழங்க முடியும்.

ஸ்மார்ட் கார்டு மூலம் தினந்தோறும் 400 லிருந்து 500 கார்டுக்கு பொருட்கள் வழங்குவார்கள். தற்போது ஓ.டி.பி., முறையில் பொருட்கள் வழங்குவதற்கு நீண்டநேரம் பிடிப்பதால் தினமும் 100 கார்டுக்கு கூட வழங்க முடியாத நிலை உள்ளது. பயனாளிகள் சிலர் விற்பனையாளர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்’’ என்றார்கள்.

Related Stories:

>