×

கொரோனா அச்சத்தால் பயணிகள் கூட்டம் சரிவு 30 சதவீத தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தம்-வருவாய் இழப்பால் ஆர்வம் காட்டாத உரிமையாளர்கள்

சேலம் : மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கி ஒரு மாதம் கழிந்தபின்பும், கொரோனா அச்சத்தால் தமிழகத்தில் பஸ்களில் பயணிகள் கூட்டம் சரிந்துள்ளது. இதனால் 30 சதவீதம் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களும், இதைதவிர ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும், அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் 900 பஸ்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களும் உள்ளன. இதில் வழித்தடத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனால் அரசு, தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு பல ேகாடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

 இதையடுத்து மீண்டும் பஸ்களை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர். இதன்பின்னர், கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டது. 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே ேபாக்குவரத்து தொடங்கியது. இதில் முழுக்க அரசு பஸ்களே இயக்கப்பட்டது.

தனியாரும் இயக்க வேண்டும் என்றால் பஸ்சில் அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மூன்று பேர் அமரும் சீட்டில் இரண்டு பேரும், இரண்டு பேர் அமரும் சீட்டில் ஒருவரும் அமர வேண்டும், பயணிகளுக்கு சானிடைசர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. அரசின் கட்டுப்பாட்டால் தங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் இன்னும் பல பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.

இது குறித்து சேலத்தை சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழத்தில் பல்வேறு வழித்தடங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு முன்பு தனியார் பஸ் தொழில் நல்ல முறையில் இருந்தது. கொரோனாவுக்கு பின்பு தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். பஸ்கள் ஓடாததால் வங்கிக்கடனை அடைக்க முடியவில்லை. டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் மெக்கானிக்குகளுக்கு சம்பளம் வழங்க சிரமமாக உள்ளது.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் பஸ்கள் இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் பஸ்கள் இயக்க ஏராளமான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் பாதி தான் உள்ளது. கொரோனா அச்சத்தால் பஸ்சில் பயணம் செய்ய மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் பஸ்களில் 33 பயணிகளை வைத்து பஸ் ஓட்டினால் டீசல், டிரைவர், கண்டக்டர் சம்பளம், பஸ்சில் பொருட்கள் தேய்மானம் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டால் கட்டுப்பாடியாகாது. தற்போது 70 சதவீத தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்களிலேயே நண்பகல்,மாலை நேரத்தில் பயணிகள் கூட்டம் இல்லாமல், சொற்ப பயணிகளை வைத்து இயக்கி வருகின்றனர்.

இவைகளை கணக்கில் கொண்டு தான் இன்னும் 30 சதவீதம் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன. இதில் ஒன்று முதல் மூன்று பஸ்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் தற்போது பஸ்சை இயக்கி வருகின்றனர். 5 முதல் 15 பஸ்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் பஸ்சை இயக்க தொடர்ந்து தயக்கம் காட்டுகின்றனர்.கொரோனா தாக்கம் குறைந்து, நூறு சதவீதம் பயணிகளை கொண்டு இயக்க எப்போது, அரசு அனுமதி அளிக்கிறதோ, அன்று முதல் மீதமுள்ள தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : corona fear Owners ,stop-loss , Salem: After a month of running buses between districts, Corona is still in fear in Tamil Nadu
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...