×

வாலாஜாவில் மாற்று திட்டத்தில் அசத்தல் சூரிய சக்தி மூலம் விவசாயம் செய்யும் விவசாயி-கலெக்டர் பாராட்டு

வாலாஜா : வாலாஜாவில் உள்ள ஒரு விவசாயி மின்சாரத்திற்கு பதிலாக சூரிய மின்சக்தியை கொண்டு பம்புசெட் இயக்கி விவசாயம் ெசய்கிறார். இதை ராணிப்ேபட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.  

ராணிப்ேபட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தகரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (57). அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர் தனது நிலத்தில் மணிலா, சேனைக்கிழங்கு மற்றும் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகிறார். இவற்றிற்கு தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பாய்ச்சி வருகிறார். பெரும்பாலும் விவசாயிகள் இலவச மின்சாரம், மற்றும் கட்டண மின்சாரத்தை பயன்படுத்தி தான் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆனால் மின் பற்றாக்குறை ஏற்படுகின்ற சூழ்நிலைகளில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே இதற்கு மாற்றாக சூரிய மின்சக்தி பயன்படுத்த மானியம் அளித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி, விவசாயி ராமுவுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் 90 சதவீத மானியத்தில் ₹4 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 2 சோலார் பேனல்கள், பம்ப்செட்டிற்கு தேவையான மின்மோட்டார் உள்ளிட்டவைகள்   வாலாஜா வேளாண் பொறியியல் துறை சார்பில் வழங்கப்பட்டது.

இதையடுத்து தனது நிலத்தில் சோலார் பேனல்கள் அமைத்து சூரிய மின்சக்தி மூலம் விவசாயம் செய்ய தொடங்கினார். தொடர்ந்து, நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு சூரிய மின்சக்தி மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறார். சூரிய மின்சக்தி மூலம் சுமார் 8 மணி நேரம் இடைவிடாமல் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடிவதாக விவசாயி ராமு தெரிவித்தார்.

வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று ேநரில் சென்று பார்வையிட்டார். மேலும், இதுகுறித்த முழு விவரங்களையும் விவசாயிடம் கேட்டறிந்தார். இதையடுத்து விவசாயி ராமு மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக கலெக்டர் திவ்யதர்ஷினி பாராட்டினார்.

ஆய்வின்போது, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார், உதவிசெயற்பொறியாளர் ரவிக்குமார், ராமச்சந்திரன், ரூபன்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து அம்மணந்தாங்கல், செங்காடு, சிறுகரும்பூர், வாங்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலத்திற்கு நேரில் சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Walaja , Walaja: A farmer in Walaja pumpset with solar power instead of electricity
× RELATED நடராஜன் என் ஹீரோ...கபில்தேவ் பாராட்டு