மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி அஞ்சலி... குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்!!

புதுடெல்லி: மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான ராம்விலாஸ் பஸ்வான் (74) இடம் பெற்றிருந்தார். அவர், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். சமீப காலமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 3 நாட்களுக்கு முன் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் திடீரென மரணம் அடைந்தார்.

பஸ்வானின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் 8 முறை மக்களவை எம்பி.யாகவும், தற்போது மாநிலங்களவை எம்பி.யாகவும் இருந்து வந்தார். பஸ்வான் மறைவையொட்டி நாட்டின் அனைத்து மாநில தலைநகரிலும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என்றும் அரசு சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ராம்விலாஸ் பஸ்வானின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்கு பிறகு இன்று பிற்பகல் பஸ்வானின் உடல் விமானம் மூலம், அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. பீகார் மாநில அரசியல் தலைவர்களில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் பஸ்வான். பீகார் சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ராம் விலாஸ் பஸ்வான் மறைவு அரசியலில் தளத்தில் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

Related Stories:

>