×

தொண்டு நிறுவனம் சார்பில் நாய்களுக்கான தகன மேடை

புதுடெல்லி : இறந்து போன நாய்களை தகனம் செய்வதற்காக தொண்டு நிறுவனம் சார்பில் தெற்கு டெல்லியின் கிட்டோர்னி அமைக்கப்பட்ட எரிமேடையை மேயர் அனாமிகா நேற்று  முன்தினம் திறந்து வைத்தார். தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் ஆங்காங்கு இறந்து,  கேட்பாரற்று கிடப்பது சகஜம். ஆனால் அழுகத் தொடங்கும் அந்த விலங்கின் உடலிலிருந்து பரவும் வைரஸ்களால், எண்ணற்ற தொற்று பாதிப்பு சமுதாயத்தில் பரவும். டெல்லி போன்ற பெரு நகரங்களில், தெரு நாய்கள் இறந்தால், மாநகராட்சிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாநகராட்சி சுகாதார துறையினர் வந்து இறந்த நாயை அகற்றி மயானத்தில் கொண்டு சென்று புதைப்பது வாடிக்கை. வீடுகளில் குழந்தைகள் மீது செலுத்தும் பாசத்தைக் காட்டிலும் செல்லப் பிராணிகளான நாய், பூனை, கிளி, முயல் போன்ற விலங்குகளுக்கு பலரும் பாசம் காட்டுவது இயல்பு. எதோ காரணத்தால் செல்லப்பிராணி இறந்தால், உடன் பிறப்பே இறந்தது போல சோகத்தில் மூழ்குவார்கள். மேலும் அப்படி இறந்த பிராணிகளை புதைக்கவோ அல்லது எரிக்கவோ அல்லல்பட வேண்டியுள்ளது. காரணம் மாநகராட்சி அனுமதி பெற்று அதனை உரிய சுகாதார விதிகள்படி புதைக்கவும் அல்லது எரிக்கவும் செய்ய வேண்டும்.

இந்நிலையில், தெற்கு டெல்லி மாநகராட்சி எல்லைக்குள் செயல்படும் தொண்டு நிறுவனம் சார்பில், வீட்டு நாய்களை தகனம் செய்ய தகன மேடை அமைக்கப்பட்டு உள்ளது. கிட்டோர்னியில் கட்டப்பட்ட தகன மேடையை தெற்கு டெல்லி மாநகராட்சி மேயர் அனாமிகா நேற்று முன்தினம் தொடங்கி வைத்து கூறுகையில், ‘‘செல்லப் பிராணியை இழப்பவர்கள், இனி எங்கும் அலைந்து திரிய வேண்டியிருக்காது. 25 கிலோ எடைக்குள் மற்றும் 25க்கு மேல் 50 கிலோ எடை தாங்கக்கூடிய காஸ் சிலின்டரில் செயல்படும் 2 தகன மேடைகள் இனி செயல்பாட்டில் இருக்கும். நாய் மட்டுமன்றி வீட்டு செல்ல விலங்குகளை இங்கு தகனம் செய்யலாம். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் ஒரு மணி நேரத்தில் சாம்பலாக்கப்படும்’’, எனக் கூறினார். அதுபோல அடிபட்டோ அல்லது உடல் நலமின்றி சோம்பித் திரியும் தெரு நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றையும் நிகழ்ச்சியில் மேயர் துவக்கி வைத்தார்.


Tags : charity , New Delhi,Cremation platform for dogs
× RELATED தீ தொண்டு நாள் வார விழா