×

இன்று உலக அஞ்சல் தினம் ‘மொழியின் விழிகளுக்கு ஒளி ஏற்ற உறுதியேற்போம்’

சேலம் : சர்வதேச அளவில் உலக அஞ்சல் தினம் அக்டோபர் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1874ம் ஆண்டு, இதே நாளில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ‘சர்வதேச தபால் ஒன்றியம்’ தொடங்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் உலக அஞ்சல் தினம் அனுசரிக்கப்படுகிறது.  அஞ்சல் சேவை என்பது முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டாக இது கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை சங்க இலக்கிய காலங்களிலேயே மயில் விடு தூது, கிளிவிடு தூது, புறா விடுதூது என்றெல்லாம் புகழப்பட்டவை நவீன அஞ்சலின் அஸ்திவாரங்கள் என்பது பெருமைக்குரியது.

அஞ்சல் என்னும் தபால் சேவை நாடு, இனம், மதம், மொழி என்று எண்ணற்ற வேறுபாடுகளை களைந்து, இதயங்களை இணைக்கும் ஒப்பற்ற சேவையாக உள்ளது. அவரவர் பண்பாடு, கலாச்சாரத்திற்கு ஏற்ப மொழிகளை சுமந்து, திசைகள் தோறும் பயணிக்கும் கடிதங்கள், எந்த ஒரு மொழிக்கும் விழியாக இருக்கிறது என்பது அறிஞர்களின் கூற்று. இன்று வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இ-மெயில் என்று எத்தனையோ நவீனங்கள், நொடிப்பொழுதில் நமது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை, அன்பொழுக வார்த்தைகளை பயன்படுத்தி நட்புகளும், உறவுகளும் முத்து முத்தாய் நமக்கு எழுதிய கடிதங்கள் 3 நாட்கள் கழித்தே கைக்கு வந்து சேர்ந்தது. அதை பிரித்து, படித்து, ரசித்தபோது ஏற்பட்ட  பரவசமும், புத்துணர்வும் இப்போது இல்லை என்பதும் உண்மை. ஆம்... அஞ்சல் என்னும் கடிதங்கள் வாழ்வில் அனைத்து தருணங்களிலும் நம்மிடம் வலம் வந்தது. நட்பு, பாசம், கோபம், தாபம், காதல், மோதல் என்று அனைத்தையும் கொட்டித்தீர்க்கும் வடிகாலாகவும் இருந்ததே இதற்கான காரணம்.

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். இன்றைய தகவல்களும் கூட நாளைய சமுதாயத்திற்கான வரலாறாக மாறும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் கரங்களில் எழுதுகோல் தாங்கி கடிதங்களை தீட்டுவோம். இதன்மூலம் மொழிக்கான விடிவெள்ளியாக இருந்து அதற்கு ஒளியூட்ட இனிய நாளில் உறுதியேற்க வேண்டும் என்கின்றனர் காலம் கடந்தும் கடிதங்களை நேசிக்கும் நமது முன்னோடிகள்.

Tags : World Postal Day , World post Day, post Day,
× RELATED பாரிமுனை ஜிபிஓ அலுவலகத்தில் தேசிய அஞ்சல் வார கொண்டாட்டம்