×

மருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டும் நம்பாமல் உள்நாட்டு ஆராய்ச்சியாளர்களை ஊக்குவியுங்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: மருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே நம்பியுள்ளது குறித்து வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், உள்நாட்டு ஆராய்ச்சியையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வின்கெம் என்ற ஆய்வகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், புதிய மருத்துகள் கண்டுபிடிக்க அரசு முறையாக ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர் நிறுவனத்துக்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்குவது குறித்து முடிவெடுக்க  மத்திய அரசின்  நிதித்துறை மற்றும் மருந்து துறையின் இணை செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மனுதாரர் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்து அதிக லாபம் இல்லாமல் மக்களுக்கு தரவேண்டும்.

இந்தியா பகைமை கொண்டுள்ள சீனாவிடமிருந்து இதற்கு முன் நான்கில் ஒரு பங்குதான் மருந்துகளை இறக்குமதி செய்து வந்தது. ஆனால், இப்போது 90 சதவீதம் அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் தரம் குறைந்த மருந்துகள் விற்பனைக்கு வருகிறது. நம் நாட்டின் எதிரியான சீனாவிடமிருந்து குறைந்த விலையில் மருந்து பொருட்கள் கிடைக்கிறது என்பதற்காக வாங்குவது தேசத்தின் பாதுகாப்பை பலவீனப்படுத்திவிடும். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு 50 குழந்தைகள் இறக்கிறார்கள். 7 நிமிடத்திற்கு ஒரு பெண் கேன்சருக்கு பலியாகிறார். மார்பக கேன்சரால் 10 நிமிடத்திற்கு ஒரு பெண் பாதிக்கப்படுகிறார். வரும் 2025ல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் மருத்துவ துறை  ஆய்வுகளுக்கும், ஆய்வாளர்களுக்கும்,  உரிய முதலீடும், ஊக்கமும் அளிப்பதில்லை என்பதால், திறமைவாய்ந்த பல மருத்துவ  நிபுணர்கள் வெளிநாடு சென்று விடுகிறார்கள். ஆராய்ச்சிகளுக்கு அரசின் ஆதரவு இல்லாததால் திறமை வாய்ந்த பலரை நாம் ஏற்கனவே இழந்து விட்டோம்.  ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளித்து மனுதாரர் போல, நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். உலக அளவில் மருத்து தயாரிப்பில் இந்தியா முன்னோடியாக இருந்து வந்தது. இறக்குமதிக்கு ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பது, தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது. மருந்துப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒரே நாட்டை மட்டுமே நம்பி இருந்தால் அண்டை நாட்டின் அத்துமீறலையும், பாதுகாப்பையும் திறமையாக சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

Tags : researchers ,China ,state governments ,iCourt , Medication, HIGHCOURT , Instruction
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...