×

மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர்: ராம் விலாஸ் பஸ்வான் மரணம்: உடல் நலக்குறைவால் உயிர் பிரிந்தது: ஜனாதிபதி, தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: டெல்லி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்றிரவு இறந்தார். அவருக்கு வயது 74. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான ராம்விலாஸ் பஸ்வான் (74) இடம் பெற்றிருந்தார். அவர், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். சமீப காலமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 3 நாட்களுக்கு முன் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் திடீரென மரணம் அடைந்தார். இத்தகவலை, அவருடைய மகனும் லோக் ஜனசக்தி கட்சியின் பீகார் மாநில தலைவருமான சிராக் பஸ்வான் உறுதிப்படுத்தினார். அவர் நேற்றிவு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அப்பா, இப்போது நீங்கள் இந்த உலகத்தில் இல்லை. நீங்கள் எங்கே இருந்தாலும், எப்போதும் எங்களுடன் இருப்பீர்கள். நாங்கள் உங்களை அதிகமாக தவற விடுகிறோம் அப்பா...’ என்று உருக்கமாக கூறியுள்ளார். இத்துடன், சிறு வயதில் தனது தந்தையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

பஸ்வானின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் 8 முறை மக்களவை எம்பி.யாகவும், தற்போது மாநிலங்களவை எம்பி.யாகவும் இருந்து வந்தார். இவருக்கு ரீனா பஸ்வான் என்ற மனைவியும், சிராக் பஸ்வான் என்ற மகனும், ஆஷா, உஷா என்ற 2 மகள்களும் உள்ளனர். தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த ராம் விலாஸ் பாஸ்வான், அரசியல் களத்தில் கடந்த 50 ஆண்டுகளாக இருந்துள்ளார். பீகாரில் பலம் வாய்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவு தலைவராக விளங்கிய இவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும், தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் பல முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். பீகாரில் இம்மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, இவருடைய கட்சி இம்முறை தனித்து களமிறங்கி இருக்கிறது. பஸ்வானுக்கு உடல் பாதிப்பு காரணமாக, இந்த அரசியல் விவகாரங்களை எல்லாம் சிராக் பாஸ்வானே கவனித்து வந்தார்.

‘பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளேன்’
பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘நான், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளேன். நமது நாட்டில் மீண்டும் நிரப்பப்பட முடியாத மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. பஸ்வானின் மரணம், எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும். நான் எனது சிறந்த நண்பரை, மதிப்புமிக்க சக நிர்வாகியை, ஒவ்வொரு ஏழையும் கவுரவமான வாழ்க்கை வாழ வேண்டும் என விருப்பப்பட்ட ஒருவரை இழந்து உள்ளேன்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Minister of State ,President ,Leaders , Union Minister, Ram Vilas Baswan, died
× RELATED பாஜ வேட்பாளர் மீது இடதுசாரி கூட்டணியும் புகார்