படகு பழுதால் சிக்கி மியான்மரில் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 8 பேர் விமானத்தில் சென்னை வருகை

சென்னை: காசிமேடு மீனவர்கள் 9 பேர் கடந்த ஜூலை 23ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றபோது படகுடன் மாயமானார்கள். மியான்மர் நாட்டில் மீட்கப்பட்ட 8 மீனவர்கள் இரண்டரை  மாதங்களுக்கு பின்பு நேற்று ெடல்லி வழியாக விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் பார்த்தீபன், லட்சுமணன், சிவகுமார், கண்ணன், தேசப்பன், எல்.தேசப்பன், ரகு, முருகன், பாபு ஆகிய 9 பேர் கடந்த ஜூலை 23ம் தேதி  காசிமேட்டிலிருந்து இயந்திர படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு தத்தளித்தனர். அதன்பின்பு மீனவர்களுடன் படகு நீரோட்டத்தில் சென்று மியான்மர் நாட்டு கடல் எல்லையில் மிதந்து கொண்டிருந்தது. மியான்மர் கடற்படையினர் மீனவர்களின் படகை பிடித்து  மீனவர்களை மீட்டனர். இதற்கிடையே மீனவர்களின் குடும்பத்தினர் மீனவர்களை உடனடியாக பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சில முறை போராட்டங்களும் நடத்தினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு மீனவர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு வர கோரிக்கை விடுத்தார்.

இதை தொடர்ந்து, மீனவர்களை விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்க மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி சென்னை காசிமேடு மீனவர்கள் 8 பேரையும் மியான்மர் கடற்படை இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. தூதரக அதிகாரிகள் 8 மீனவர்களும் பாஸ்போா–்ட், விசா இல்லாமல் இந்தியா திரும்புவதற்கு வசதியாக எமர்ஜென்சி சர்டிபிகெட் வழங்கினர். இந்நிலையில், மியான்மர் நாட்டில் சிக்கித்தவித்துக்கொண்டிருந்த மீனவர்களை மீட்டுக்கொண்டு  வந்தே பாரத்   ஏர் இந்தியா விமானம் மியான்மர் நாட்டில் உள்ள யங்கூன் விமானநிலையத்திலிருந்து டெல்லிக்கு நேற்று புறப்பட்டது. இந்த 8 மீனவர்களும் மீட்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்து சேர்ந்தனர். நேற்று காலை டெல்லியிலிருந்து விமானத்தில் புறப்பட்டு ேநற்று மதியம் சென்னை விமானநிலையம் வந்தனர். இரண்டரை மாதங்களுக்கு பின்பு மறுபிறவி எடுத்து சென்னை திரும்பிய மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சால்வை, மாலை அணிவித்து வரவேற்றார்.

அப்போது அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: மீனவர்கள் ஆகஸ்ட் 7ம் தேதி கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை என்றதும்  உடனடியாக மத்திய அரசுக்கு தகவல் கொடுத்து  தேட தொடங்கினோம். இந்திய கடற்படை, கடலோர காவல்படையினரும் தேடினர். இறுதியில் கடந்த மாதம் மியான்மர் கடல் எல்கையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அதன்பின்பு அவர்களை கடல் மார்க்கம் அல்லது விமானத்தில் அழைத்து வருவதா என்பதில் தாமதமானது. தற்போது, சிறப்பு விமானத்தில் டெல்லி வழியாக அழைத்து வந்திருக்கிறோம். படகை சரி செய்யும்போது மாயமான பாபுவை தேடும் பணி நடக்கிறது. இவ்வாறு கூறினார்.

மீட்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது: நாங்கள் 9 பேர் சென்றுவிட்டு 8 பேராக திரும்பி வந்திருக்கிறோம். எங்கள் படகில் திடீரென மின்சார கோளாறு ஏற்பட்டு, நாங்கள் மிகவும் சிரமத்திற்குள்ளானோம். படகு எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் நீரோட்டம் வழியாக செல்லத்தொடங்கியது. 15 நாட்களுக்கு பின்பு ஸ்ரீலங்கா கப்பலிடம் உதவி கேட்டோம். கயிறை கட்டி இந்தியா அழைத்துவர ஏற்பாடு செய்தனர். ஆனால் எங்கள் படகு உடையும் நிலையிலிருந்ததால், எங்களிடம் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டனர். எங்களிடமிருந்த உணவு காலியான பின்பு மீன்களை பிடித்து சாப்பிட்டோம். மாலை 6 மணிக்கு மேல் அருகில் உள்ளவர்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் இருளில் தவித்தோம். இவ்வாறு 58 நாட்கள் அவதிப்பட்டோம். இந்நிலையில் எங்களோடு இருந்த பாபு என்பவரும் காணாமல் போய்விட்டார். அவரை மியான்மர் கடற்படையும், அங்குள்ள மீனவர்களும் தேடுகின்றனர். மியான்மர் கடற்படையினர் எங்களை காப்பாற்றி நல்லமுறையில் நடத்தினர்.இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னை விமானநிலையத்தில் திமுக சார்பில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் வரவேற்றனர்.

Related Stories:

>