×

கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு கடன் 107 சதவீதம் அதிகரிப்பு: 6 மாதத்தில் 50,000 கோடி வாங்கியது

சென்னை: கொரோனா ஊரடங்கு காலமான கடந்த ஆறு மாதத்தில் தமிழகம் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 107 சதவீதம் அதிகமாகும். கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் மக்களின் வருமானம் குறைந்திருந்தாலும் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது.  தமிழகத்தின் வருவாய் வசூல் குறைந்திருந்தாலும் மக்கள் திட்டங்கள், மாநில வளர்ச்சி கடன் என்ற காரணம் காட்டி பத்திரங்களை வாங்க மாநில அரசு கட்டாயப்படுத்தியது. அந்த வகையில் தமிழகம் மக்களிடம் இருந்து இந்த நிதியாண்டில் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. இந்த அடிப்படையில் நாட்டிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் என்ற சாதனையை மகாராஷ்டிரா பெற்றுள்ளது. அடுத்தபடியாக தமிழகமும் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களும் அதிக கடன் பெற்றுள்ளன.

கணக்கு தணிக்கை தலைவர் அறிக்கையின்படி, 202021 நிதியாண்டில் தமிழகத்தின் நிதி பற்றாக்குறை 21,833 கோடியாகும். வருவாய் பற்றாக்குறை 18,266 கோடி. கடன் அளவு கணக்கீடு ஏஜென்சியின் அறிக்கையின்படி தமிழகத்தின் கடன் செலவு செப்டம்பரில் 6.19 சதவீதமாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தில் 6.16 சதவீதமாக குறைந்துள்ளது. ஏப்ரலில் சராசரி வட்டி விகிதம் 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகம் 10 முதல் 35 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால கடன் பத்திரங்களை வினியோகித்து கடன் பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி குறுகிய கால கடன்களை தமிழகம் வாங்கவில்லை. கடன் பத்திரங்களின் முதிர்வு காலத்தை நீட்டிப்பதே இதன் நோக்கம். 202021ம் ஆண்டைய தமிழக பட்ஜெட்டில் தமிழகம் 59,209.30 கோடி கடன் பெற திட்டமிட்டிருந்தது. ஆனால், கடந்த 6 மாதத்திலேயே 50 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. இது கடந்த ஆறு மாதத்தில் தமிழகம் வாங்கிய கடனாகும். இது கடந்த ஆண்டைவிட 107 சதவீதம் அதிகம். இந்நிலையில் மாநிலத்தின் கடன் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிபந்தனைகள் விதிக்கவில்லை. எனவே, தமிழகம் தற்போது வாங்கியுள்ள கடன் தொகையைவிட மேலும் 9,627 கோடி கடன் வாங்க வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Government ,corona crisis ,Tamil Nadu , Corona, Government of Tamil Nadu, Credit
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...