×

கர்நாடகாவில் தொடங்கப்படும்: புதிய தமிழ் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்: எடியூரப்பாவுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தங்களின் தாய் மொழியை கற்றுக் கொள்வதற்காக அங்குள்ள பல மாவட்டங்களில் தமிழ் பள்ளிகளை மாநில அரசு தொடங்கி இருக்கிறது. அங்குள்ள தனியார் தமிழ் பள்ளிகளுக்கு கர்நாடக அரசு அங்கீகாரம் மட்டுமல்லாமல் மானியங்களையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா தமிழ் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்திடம் இருந்து எங்களுக்கு கடிதம் வந்தது. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், புதிய தனியார் தமிழ் பள்ளிகளை தொடங்குவதற்கு கர்நாடகா அரசு அங்கீகாரம் தருவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா தமிழர்கள் கோலார் தங்க சுரங்கம், குத்தி தங்க சுரங்கம், சந்தூர் மங்கனீஸ் சுரங்கம், சிக்மங்களூர், மங்களூரில் உள்ள காபி தோட்டங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக தமிழர்கள் அளித்துள்ள பங்களிப்பு அதிகமாகும். கர்நாடகாவில் கட்டுமான தொழில், வேளாண்மை பிரிவுகளில் பெரிய அளவில் பங்களித்து வருகின்றனர். எனவே, கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சமீபத்தில் மூடப்பட்ட அதுபோன்ற பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். தமிழை பயிற்று மொழியாக கொண்டு திறக்கப்படும் புதிய தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அல்லது அனுமதியை அளிக்க வேண்டும். வேறு மொழி பள்ளிகளாக மாற்றப்படும் பள்ளிகளை மீண்டும் தமிழ் பள்ளிகளாக மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Karnataka ,schools ,Tamil ,Chief Minister ,Eduyurappa ,Edappadi , Karnataka, Chief Minister Edappadi, letter
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!