×

கள்ளக்குறிச்சி கட்சி அலுவலகத்துக்குள் நுழைய வழிகாட்டுதல் குழு உறுப்பினருக்கு எதிர்ப்பு: நடுரோட்டில் கோஷ்டி சண்டை

கள்ளக்குறிச்சி:  விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பதவி வகித்தவர் மோகன். இரண்டுமுறை அமைச்சராகவும் இருந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மோகன் மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த கதிர் தண்டபாணியை மாவட்ட செயலாளராக ஜெயலலிதா நியமித்தார். அதற்கு பதிலாக மோகனுக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2016-ல் சங்கராபுரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மோகன் தோல்வியடைந்ததால், அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மோகன் தலைமையில் ஒரு அணியாகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.  மோகன் ஓ.பி.எஸ். ஆதரவாளராகவும், குமரகுரு இ.பி.எஸ். ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், முதல்வர் வேட்பாளர் குறித்த போட்டியில், ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். இடையேயான மோதல் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், வழிகாட்டுதல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஓ.பி.எஸ்.  ஆதரவாளரார் மோகன் இடம் பெற்றுள்ளார். அதையடுத்து, நேற்று முதல்முறையாக சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்தார். அப்போது கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கும் மோகனை வரவேற்கவும் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். ஆனால் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டி கிடந்தது. ஆத்திரமடைந்த சிலர் பூட்டை இரும்பு ராடால் உடைக்க முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த சில நிர்வாகிகள் பூட்டை உடைக்க கூடாது என எச்சரித்ததால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த பரபரப்பினால், மாலை 3.50 மணியளவில் எம்.ஜி.ஆர். சிலைக்கு வழிகாட்டு குழு உறுப்பினர் மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, மாவட்ட மருத்துவ அணிசெயலாளர் காமராஜ் உள்ளிட்ட 100-க்கு அதிகமான ஆதரவாளர்கள் சாலையிலேயே மோகனுக்கு சால்வை அணிவித்தனர். ஆனால், பெரும்பாலான நிர்வாகிகள் அவரை கண்டுகொள்ளவில்லை. இது, அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் ஒன்றுபடவில்லை என்று காட்டியது.

Tags : steering committee member ,road ,fighting , Counterfeiting, resistance, fighting
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை