×

கொல்கத்தா வீரர்களின் கனவுகளால் கலைந்தது சென்னை அணியின் கனவு

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னைக்கு 47 பந்துகளில் 68 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் கேப்டன் டோனி களமிறங்கினார். அதற்கு ஏற்ப  அவரும் அடித்து விளையாட சென்னை வெற்றியை நோக்கி நகர்ந்தது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த  வருண் சக்கரவர்த்தி(கொல்கத்தா) தனது கடைசி ஓவரை வீசினார். அதில் 2வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் டோனி. ஆனால் அடுத்த பந்தில் அவரை கிளீன் போல்டாக்கினார் வருண். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியதும், கொல்கத்தா வென்றதும் தனிக்கதை.

வெற்றிக்கு பிறகு பேசிய வருண், ‘டோனிக்கு பந்து வீச வேண்டும் என்பது கனவு. அந்த அதிசய தருணம் நிகழ்ந்துள்ளது. இந்த ஆட்டத்தை பொறுத்தவரை  நல்ல நீளத்திற்கு பந்தை வீசினால் டோனியின் விக்கெட்டை எடுக்க முடியும் என்று நினைத்தேன். அப்படி நினைத்தபடி சரியாக வீசி விக்கெட் எடுத்தேன். ரசிகனாக டோனி சாருடன் படம் எடுத்திருக்கிறேன். தமிழில் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். அவர் என்றும் தல.... தல... தான்’ என்று கூறினார்
அதேபோல் கொல்கத்தா வெற்றிக்கு முக்கிய காரணம் தொடக்க வீரராக களம் கண்ட ராகுல் திரிபாதி.  ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட அவர், ‘பந்து வீசவும், பேட்டிங் செய்யவும் இரண்டுக்கும் தயாராகி இருந்தேன். எங்கு வாய்ப்பு  கிடைத்தாலும் அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

பந்துகள் நன்றாக வரும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்ப ரன்களை சேர்க்க வேண்டும் என்று உணர்ந்தேன். நடந்தது.  எனது கனவு நனவாகி உள்ளது’ என்று கூறினார்.டாஸ் வென்ற முதலில் களமிறங்கிய கொல்கத்தா, 20 ஓவர் முடிவில் எல்லா விக்கெட்களையும் இழந்து 167ரன் எடுத்தது. அந்த அணியின் ராகுல் திரிபாதி அதிகபட்சமாக 81ரன் எடுத்தார். மற்றவர்கள் 17ரன்னை தாண்டவில்லை. சென்னையின் பிரவோ 3, சாம் கரண், கரண் சர்மா, ஷர்துல் ஆகியோர் தலா 2விக்கெட் எடுத்தனர். அடுத்த விளையாடிய சென்னைக்கு ஷேன் வாட்சன் 50, ராயுடு 30 என நல்ல தொடக்கம் தந்தனர். மற்றவர்கள் அதை தக்க வைக்கவில்லை. அதை விட கொல்கத்தா வீரர்கள் வருண், ரஸ்ஸல், நரைன், நாகர்கோட்டி, மாவி ஆகியோர் சரியான நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தினர். எனவே சென்னை 20ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 157ரன் மட்டுமே எடுத்தது. அதனால் கொல்கத்தா 10 ரன் வித்தியாசத்தில் வென்றது.


Tags : team ,Chennai ,Kolkata , கொல்கத்தா , சென்னை
× RELATED கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம்...