×

பேர்ஸ்டோ, வார்னர் அபார ஆட்டம்: கிங்ஸ் லெவனுக்கு 202 ரன் இலக்கு

துபாய்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 202 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் சித்தார்த் கவுலுக்கு பதிலாக கலீல் அகமது சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் ஹர்பிரீத் பிரார், கிறிஸ் ஜார்டன், சர்பராஸ் கான் நீக்கப்பட்டு பிரப்சிம்ரன் சிங், அர்ஷ்தீப் சிங், முஜீப் உர் ரகுமான் இடம் பெற்றனர். ஐதராபாத் தொடக்க வீரர்களாக வார்னர், பேர்ஸ்டோ களமிறங்கினர். வார்னர் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ சிக்சரும் பவுண்டரியுமாக விளாசித் தள்ளி பஞ்சாப் பந்துவீச்சை பஞ்சாய் பறக்கவிட்டார். அவர் 19 ரன் எடுத்திருந்தபோது ஷமி பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ராகுல் வீணடித்தார். இந்த அதிர்ஷ்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பேர்ஸ்டோ 28 பந்தில் அரை சதம் அடிக்க, மறு முனையில் வார்னர் 37 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார்.

நடப்பு தொடரில் 3வது அரை சதம் அடித்த பேர்ஸ்டோ அதை சதமாக்கும் முயற்சியில் வேகமாக முன்னேறினார். 15வது ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் விக்கெட் இழப்பின்றி 160 ரன் எடுத்திருந்தது. தொடக்க ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய பஞ்சாப் அணி, வியூகத்தை மாற்றுவது குறித்து ஆலோசிப்பதற்காக டைம் அவுட் வாங்கியது. திடீர் சரிவு: 16வது ஓவரை ரவி பிஷ்னோய் வீச வந்தார். முதல் பந்தில் வார்னர் (52 ரன், 40 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) மேக்ஸ்வெல் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரின் 4வது பந்தில் பேர்ஸ்டோ (97 ரன், 55 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 17வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க, ஐதராபாத் அணி 160/0 என்ற வலுவான நிலையில் இருந்து, 161 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவைச் சந்தித்தது. அடுத்தடுத்து முக்கிய விக்கெட்கள் வீழ்ந்தது ஸ்கோர் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. அப்துல் சமத் 8 ரன்னில் பெவிலியன் திரும்ப, பிரியம் கார்க் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அபிஷேக் ஷர்மா தன் பங்குக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி விடைபெற்றார். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. வில்லியம்சன் 20 ரன், ரஷித் கான் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 3, அர்ஷ்தீப் 2, ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.


Tags : Burstow ,Warner ,Kings XI , ஐபிஎல்
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் முதல் டி20 11 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி