×

கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு: 5 டிஎம்சியை நெருங்குகிறது

சென்னை: கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்து காரணமாக சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளாக புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் உள்ளன. இவைகளில் தண்ணீர் வற்றாமல் இருந்தால் மட்டுமே சென்னை மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியும். கண்டலேறு அணையில் கடந்த மாதம் 18ம் தேதி 30 டிஎம்சிக்கு மேல் நீர் இருப்பு இருந்ததால் தமிழகத்துக்கான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் வருவதை தொடர்ந்து, கடந்த மாதம் 50 மில்லியன் கனஅடியாக இருந்த பூண்டி ஏரியின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 1087 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

இங்கிருந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மற்ற 3 ஏரிகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால், சோழவரம் ஏரியில் 110 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 2094 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1551 மில்லியன் கன அடியுமாக மொத்தமாக ஏரிகளின் நீர்மட்டம் 4,842 மில்லியன் கன அடியாக உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 113 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 65 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. தற்போது இந்த ஏரிகளில் நீர் மட்டம் 5 டிஎம்சியை நெருங்குவதால், அடுத்த 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : lakes ,Chennai ,Krishna , Lake, water level, rise
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...