×

அரசியல் கொலைகளை கண்டித்து பேரணி: பாஜ தொண்டர்கள், போலீசார் மோதல்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசியல் கொலை செய்யப்படுவதை கண்டித்து பாஜ இளைஞர் அணி நடத்திய பேரணியின்போது தொண்டர்கள், போலீசாரிடையே மோதல் வெடித்தது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பாஜ தொண்டர்கள் உட்பட அரசியல் கொலைகள் அதிகரித்துள்ளது. சமீபத்தில், உள்ளூர் பாஜ தலைவர் மனீஷ் சுக்லா வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தில் கொல்லப்பட்டார். இதனால், போராட்டம் வெடித்தது. பாஜ தொண்டர்கள் அரசியல் ஆதாயத்துக்காக கொல்லப்படுவதை கண்டித்து பாஜ.வின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா சார்பில் தலைமை செயலகம் நோக்கி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பேரணிக்கு அரசு அனுமதி தரவில்லை. பாஜ பேரணியை முன்னிட்டு 5000 போலீசார் பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், தடையை மீறி பல இடங்களில் பேரணியில் ஈடுபட்ட பாஜ தொண்டர்கள், போலீசாரிடையே மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக பாஜ தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதோடு சாலைகளில் டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புகை மூட்டங்கள் சூழ்ந்தது. சாலைகளில் கற்களை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள். இதனை தடுப்பதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். பாஜ தொண்டர்கள் மீது தடியடி நடத்தியதோடு, தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர். மூத்த தலைவர்கள் சிலர் உட்பட பாஜ தொண்டர்கள் பலர் இந்த மோதலின்போது காயமடைந்தனர். சம்பவத்தின்போது போலீசார் காயமடைந்தார்களா என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. கொல்கத்தா, அவுராவில் இருந்து ஆயிரக்கணக்கான பாஜ தொண்டர்கள் தலைமை செயலகம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது, அவுராவின் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. பாஜ தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, தேசிய துணை தலைவர் முகுல் ராய் தலைமையிலான பேரணியின்போதும் இதேபோன்று மோதல் சம்பவங்கள் ஏற்பட்டன. போலீசாருடன் நடந்த மோதலை தொடர்ந்து முகுல் ராய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


Tags : volunteers ,BJP ,West Bengal , BjP , volunteers, police, clash
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி