×

துணை அதிபர் வேட்பாளர்கள் காரசாரம்: நேரம் வந்து விட்டது-கமலா ஆட்சி மாற்றம் வராது-பென்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கும் மைக் பென்சுக்கும் இடையே நேரடியாக அனல் பறக்கும் விவாதம் நடந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், உட்டாவில் உள்ள சால்ட்லேக் சிட்டியில் இவர்கள் பங்கேற்ற முதல் நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது.  இதில் பேசியபோது கமலா கூறுகையில், ‘‘கொரோனாவை கையாளுவதில் டிரம்ப் அரசு  மிகப் பெரிய தோல்வியை அடைந்துள்ளது.

அவருடைய தவறான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. அமெரிக்காவின் நண்பர்களுக்கு துரோகம் செய்துவிட்டு, சர்வாதிகரிகளை டிரம்ப் ஆதரிக்கிறார். டிரம்பின் தன்னிச்சையான வெளியுறவு கொள்கையால், தேச பாதுகாப்புக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. சீனா உடனான வர்த்தகப் போரிலும் டிரம்பின் அரசு தோல்வியடைந்து விட்டது. இதனால், அமெரிக்காவில் புதிய தலைமைக்கான நேரம் தற்போது வந்துள்ளது,’’ என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்து மைக் பென்ஸ் பேசுகையில், பல லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாக வேண்டியதை, டிரம்ப் அரசு குறைத்துள்ளது. ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் டிரம்ப் நிர்வாகம் துணை நிற்கிறது. ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் டிரம்ப் அரசு சாதனை படைத்துள்ளது. தீவிரவாதி அபுபக்கர் அல் பாக்தாதியை கொல்லவும், ஈரானின் ஜெனரல் காசிம் சுலைமானியை கொல்லவும் அமெரிக்க ராணுவத்திற்கு சுதந்திரம் அளித்தார். எனவே, ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பே இல்லை,’’ என்று பதிலடி கொடுத்தார்.


கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மாட்டேன்

கமலா ஹாரிஸ் மேலும் கூறுகையில், விஞ்ஞானிகளின் ஆலோசனை, அறிவுரையை ஏற்காமல் டிரம்ப் அரசு வெளியிடும் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மாட்டேன். அதே நேரம், நாட்டின் உயர்ந்த அறிவியல் ஆலோசகர் டாக்டர் அந்தோணி பவுசி பரிந்துரைக்கும் தடுப்பூசியை மட்டுமே பயன்படுத்துவேன்,’’ என்று கூறினார்.

கொரோனா பாதிப்பு கடவுளின் ஆசீர்வாதம்’

வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் இருந்து கொரோனா சிகிச்சை முடிந்து வெள்ளை மாளிகை திரும்பிய பிறகு அதிபர் டிரம்ப் நேற்று வெளியிட்ட வீடியோ செய்தியில், ``ராணுவ மருத்துவமனையில் முதல் நாள் நடக்க கூட கஷ்டமாக இருந்தது. ஆனால், 24 மணி நேரத்தில் புத்துணர்ச்சி கிடைத்தது. எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுளின் ஆசீர்வாதமாக கருதுகிறேன். எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்,’’ என்றார்.



Tags : Vice ,Kamala ,regime change ,Benz , Vice President, Candidates
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...