×

புறவழிச்சாலை பணிகள் முடக்கம்: நெரிசலில் சிக்கி தவிக்கும் ‘தேனி’ வாகன ஓட்டிகள் அவதி

தேனி: தேனியில் புறவழிச்சாலை பணிகள் நிறைவடையாதால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. நகரின் முக்கிய பகுதியான நேருசிலை வளாக பகுதி எந்த நேரமும் நெரிசலில் தவிக்கிறது. தேனியில் மதுரை ரோடு, கம்பம் ரோடு, பெரியகுளம் ரோடு மூன்றும் நேரு சிலை சந்திப்பில் சந்திக்கின்றன. இந்த மூன்று ரோடுகளும் மிகவும் அதிகளவு போக்குவரத்து நெரிசல் உள்ள ரோடுகளாக உள்ளன. இதனால் மதுரை ரோட்டில் அரண்மனைப்புதுார் விலக்கில் இருந்து வயல்பட்டி, கொடுவிலார்பட்டி வழியாக உப்பார்பட்டி அருகே குமுளி ரோட்டில் சேரும்  புறவழிச்சாலையும், பெரியகுளம் ரோட்டில் கோர்ட்டிற்கு அருகில் இருந்து அல்லிநகரம் வழியாக பழனிசெட்டிபட்டியை கடந்து வீரபாண்டியில் சேரும் புறவழிச்சாலையும் அமைக்க  திட்டமிடப்பட்டுள்ளது.

அல்லிநகரம்- வீரபாண்டி இணைப்பு புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து ரோடு சீரமைக்கும் பணிகளும் தொடங்கி சில மாதங்களாக பணிகள் மந்த நிலையில் நடந்து வருகின்றன. அரண்மனைப்புதுார் விலக்கில் இருந்து உப்பார்பட்டி சாலை திட்டம் பைலிலேயே முடங்கி கிடக்கிறது. நகரில் ரோடுகள் விரிவாக்கம் இல்லாத நிலையில், வாகனங்கள் பல மடங்கு பெருகி விட்டன. இதனால் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் நகர்பகுதியில் கடுமையாக உள்ளது. குறிப்பாக நேருசிலை பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து தான் கடக்க வேண்டும். போக்குவரத்தை  சீரமைக்க கூட இங்கு போலீசார் இல்லை. மொத்தமே நகர் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த இரண்டு போலீசார் மட்டுமே போக்குவரத்து சீரமைக்கும் பணிகளை சரி செய்து வருகின்றனர்.

நகரம் வளர்ச்சி அடைந்து வருவதால், போக்குவரத்தினை சீர்செய்ய புறவழிச்சாலை திட்டப்பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘தேனி அல்லிநகரம்-வீரபாண்டி புறவழிச்சாலை சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வந்து விடும். நகருக்குள் பெரியகுளம் ரோடு, கம்பம் ரோடு, நேரு  சிலை, மதுரை ரோடுகளில் மேம்பாலம் அமைக்க தற்போது மண் பரிசோதனை நடந்து வருகிறது. மேம்பால பணிகள் நிறைவடைந்தால் நகருக்குள் நெரிசல் குறைந்து விடும்,’’என்றனர்.

Tags : motorists ,Theni , Bypass works freeze: ‘Theni’ motorists suffering from congestion
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி