×

ஆஸ்திரேலியா பந்து மனிதர்!

நன்றி குங்குமம் தோழி

கொரோனா தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணியுங்கள். சானிடைசரால் கைகளை கழுவுங்கள் என பல்வேறு அறிவிப்புகள் வந்தபடி உள்ளன. இதையும் தாண்டி கொரோனா அசுர வேகத்தில் பரவி வருவதால் வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை விழிபிதுங்கி நிற்கிறது. இதை தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள் என்ற அறிவிப்புகளுக்கும் பஞ்சமில்லை. சென்னையை அடுத்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. கேரளாவில் சந்தைக்கு செல்பவர்களுக்கு குடை கொடுத்து அதை பிடித்து செல்ல அறிவுறுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் கொரோனா குறித்த மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக டிரண்டாகி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பிளாஸ்டிக்கால் ஆன  மெகா சைஸ் பந்து உள்ளே நின்றபடி அவர் வெளியில் நடமாடி வருகிறார். ஏதோ சாகசம் செய்யப்போகிறார் என நினைத்தால் அவர் கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க அந்த மெகா பந்துக்குள் தன்னை அடைத்துக் கொண்டுள்ளார்.

கார்கள் இருபுறமும் சென்று கொண்டிருக்க அதன் இடையே சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டில் அந்த பந்துக்குள் நின்றபடி சாகச பயணம் செய்தார் அந்த இளைஞர். தனது பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அவரிடம் கேட்டபோது ‘‘நான் சாகசம் எதுவும் செய்யவில்லை. கொரோனாவில் இருந்து பாதுகாக்க சமூக இடைவெளியை இயற்கையாக ஏற்படுத்த விரும்பியே இந்த பந்துக்குள் நின்றபடி செல்கிறேன். அப்போது பொதுமக்கள் என்னை நெருங்குவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பதுடன் காற்றில் பறந்து வரும் பாக்டீரியாவோ, வைரசோ நான் இருக்கும் பிளாஸ்டிக் பந்து என்ற கவசத்தை தாண்டி உள்ளே வராது’’ என்றார் அதிரடியாக.

மெல்போர்ன் நகரம் அருகேயுள்ள பெல்கிரேவ் நகரில் தான் இந்த காட்சியை பார்க்க முடிகிறது. இதை வீடியோவாக படம் பிடித்து ஜெனைன் ரிக்பி என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அப்போது பந்துக்குள்  இருந்தபடி அந்த இளைஞர், `பந்துக்குள் மனிதன் நான்’ என்ற பாடல் ஒன்றை பாடியபடி செல்லும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ‘‘கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மாஸ்க்கை விட சிறந்த சாதனமாக இந்த பிளாஸ்டிக் பந்தில் செல்வது இருக்கும்’’ என கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோவை 1.6 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அடடே இது தெரியாமல் ரொம்ப நாளா மாஸ்க் அணிந்து செல்கிறேன்பா என நீங்கள் குமுறுவது கேட்கிறது!

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags : Australia ,ball man , Australia ball man!
× RELATED ஆஸ்திரேலியா டி20 அணியில் ஷார்ட்: பயிற்சியாளர் லாங்கர் பேட்டி