×

சென்னிமலையில் அதிகபாரம் ஏற்றி செல்லும் லாரிகள் சிறைபிடிப்பு : லாரி உரிமையாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை

சென்னிமலை: ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கல், மண் அதிகமாக ஏற்றிச்செல்லும் லாரிகளில் இருந்து சாலையில் சிதறும் கற்களால் விபத்து ஏற்படுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். சென்னிமலை அடுத்த ஐயம்பாளையம், பனியம்பள்ளி, ஈங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான லாரிகள் ஊத்துக்குளி சாலையில் இருந்து பெருந்துறை சாலைக்கு செல்கின்றன. இதன் காரணமாக சாலையில் பெருமளவில் கற்கள், மண் கொட்டிக்கிடக்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், தினமும் விபத்தை சந்திக்கின்றனர்.

மேலும் சாலைகளும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. நேற்று காலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், தலைமையில் திரண்ட பொதுமக்கள் அவ்வழியே வந்த 50க்கும் மேற்பட்ட லாரிகளை வழிமறித்து சிறைபிடித்தனர்.  இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை வட்டாட்சியர் முத்துக்கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்று (8ம் தேதி) வட்டாட்சியர் அலுவலகத்தில் லாரி உரிமையாளர்களுக்கும், பொதுமக்களும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட லாரிகள் விடுவிக்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட லாரிகள் சுமார் 5 மணி நேரம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

  சென்னிமலை பகுதியில் ஓடும் பெரும்பாலான லாரிகளில் அதிகபாரம் ஏற்றுவதால், வேகத்தடை, குழியில் லாரிகள் ஏறி இறங்கும்போது கற்கள் சாலையில் சிதறி விழுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அனுமதியின்றி லாரியில் மண் கொண்டு செல்கின்றனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதன் காரணமாக பொதுமக்கள்  லாரிகளை சிறைபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

Tags : Talks ,lorry owners ,Chennimalai , In Chennimalai, lorry, captivity, negotiation
× RELATED நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...